12 June 2010

தெய்வ மணிமாலை - 2

தெய்வ மணி மாலை - 2

பரமேது வினைசெயும் பயனேது பதியேது
பசுவேது பாச மேது
பத்தியேது அடைகின்ற முத்தியேது அருளேது
பாவ புண்ணியங்க ளேது

வரமேது தவமேது விரதமேது ஒன்றுமிலை
மனம்விரும் புணவுண்டு நல்
வதிர மணிந்துமட மாதர்தமை நாடிநறு
மலர் சூடி விளையாடி மேற்

கரமேவ விட்டுமுலை தொட்டு வாழ்ந்தவரோடு
கலந்து மகிழ்கின்ற சுகமே
கண்கண்ட சுகமிதே கைகண்ட பலனேனுங்
கயவரைக் கூட தருள்

தரமேவு சென்னையிற்கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
மேன்மை பொருந்திய சென்னைக் கந்த கோட்டத்தில் எழுந்தருளும் கந்த வேளே , தூய மணிகளுட் சைவ மணியாம் சண்முகத் தெய்வமணியே, பரம் என்பது யாது ? வினையாவது யாது? வினியின் பயன் என்பது யாது ? பத்தி, பசு, பாசம் என்பன யாவை? பத்தியாவது யாது? அதனால் அடைகின்ற முத்தி என்பது யாது ? அருள் என்பது யாது ? பாவ புண்ணியங்கள் யாவை? வரம் என்றும் தவம் என்றும் விரதம் என்றும் கூறுவன ஒன்றும் இல்லை. மனம் ஆசைபடுகின்ற உணவையுண்டு, நல்ல ஆடையுடுத்து இலமகளிரை நாடி யடைந்து மணம் வீசும் பூக்களைச் சூடிப் பலவகையாக விளையாடி . கைகளை அம்மகளிர் மேற்செலுத்தி அவர்களுடைய முலையைப் பற்றி மெய்யோடு மெய்கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம்; இதுவே, வாழ்வின் கைகண்ட பயன் என்று கருதி மொழிகின்ற கீழ் மக்களோடு கூடாதாவாறுஅருள் புரிவாயாக .

No comments:

Post a Comment