20 June 2010

தெய்வ மணிமாலை - 8

தெய்வ மணிமாலை - 8
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயுற்ற
வாழ்வினான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
தருமம் செய்வோர் மிகுந்துள்ள சென்னையில் உள்ள கந்த கோட்டத்துள்
எழுந்தருளும் கந்த வேளே, ஒருமுகப்பட்ட மனத்துடன் உன் மலர் போன்ற
திருவடிகளை நினைக்கும் உத்தமர்களின் உறவே எனக்கு வேண்டும்.
உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு எனை
அடையாதவாறு காக்க வேண்டும்.
பெருமையுடைய உன் புகழையே நான் பேசுபவனாகவும், பொய்ம்மை மொழிகளைப்
பேசாதவனாகவும் இருக்க வேண்டும்.
பெருமைதரும் பெருநெறியையே கடைபிடிப்பவனாக அமைய வேண்டுமே அன்றி மதம் எனும்
பேயால் பிடிபடாதவனாக இருக்க வேண்டும்.
இயல்பாகவே தோன்றும் பெண்ணாசையை மறந்தொழியவும், அதற்கீடாக உனை மறவாதொழுக வேண்டும்.
மதிநுட்பமும், உன் கருணையும், நோயற்ற வாழ்வும் அளித்து அருள வேண்டும்.

No comments:

Post a Comment