22 August 2010

குறையிரந்த பத்து - 3

குறையிரந்த பத்து - 3
திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 95
தெளிக்குமறைப் பொருளேயென் அன்பே என்றன்
செல்வமே திருத்தணிகைத் தேவே யன்பர்
களிக்குமறைக் கருத்தே மெய்ஞ் ஞான நீதிக்
கடவுளே நின்னருளைக் காணே னின்னும்
சுளிக்குமிடித் துயரும்யமன் கயிறும் ஈனத்
தொடர்பும்மலத் தொடர்பும் மனச்சோர்வு மந்தோ
அளிக்குமெனை என்செயுமோ அறியே னின்றன்
அடித்துணையே யுறுதுணை மற்றன்றி யுண்டோ
உரை:
           உணர்வைத் தெளிவிக்கும் வேதங்களின் உட்பொருளாகியவனே, எனக்கு அன்பும் செல்வமுமாகிய பெருமானே, திருத்தணிகையில் எழுந்தருளும் தெய்வமே, மெய்யன்பர் உண்மை தெளிந்து மகிழ்தற்கேதுவாகிய வேதக் கருத்தே, மெய்ம்மை அறிவாகிய நீதிக் கடவுளே, நின் திருவருளைப் பெறாமல் பெறுவான எல்லாம் வறுமைத் துன்பமும் உயிர் கவரும் எமனின் பாசக் கயிற்றுத் துன்பமும் கீழானவர் தொடர்பும் மனத்தளர்ச்சியுமே யாதலால் , நின் அருளால் ஆதரிக்கப்பட வேண்டிய என்னை அவை எத்துயரில் ஆழ்த்துமோ, அறியேன்; உன் திருவடிகளை தவிர வேறு துணை யாது எனக்கு?  

No comments:

Post a Comment