22 June 2010

தெய்வ மணிமாலை - 11

நாம்பிரமம் நமையின்றி யாம்பிரமம் வேறில்லை
நன்மை தீமைகளு மில்லை
நவில்கின்ற வாகியாந் தரமிரண்டினு மொன்ற
நடுநின்ற தென்று வீணாள்

போம்பிரம நீதி கேட்போர் பிரமையாகவே
போதிப்பர் சாதிப்பர் தாம்
புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினையொன்று
போந்திடிற் போக விடுவார்

சாம்பிரம்மா மிவர்கள் தாம் பிரமமெனு மறிவு
தாம்பு பாம்பெனு மறிவு காண்
சத்துவ வகண்டபரி புரணா காரவு
சாந்த சிவசிற் பிரம நீ

தாம்பிரிவில் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.


உரை:
   கந்தப் பெருமானே, தெய்வ மணியே, அளவுக்கு அகப்படாத பெருவெளியில்
விளங்கும் ஞானப் பெரிய பொருளாகிறவன் நீ;
நாமே அப்பிரமமாகிய பெரிய பொருள்; நம்மைமன்றிப் பிரமம் என வேறு இல்லை;
நன்மை தீமை என்பதும் இல்லை; புறப்பூஜை, அகப்பூஜை என ஒன்றும் கிடையாது;
பிரமதியானமே நடுநிலையானது என நாளை வீணாக்குவர்; பிரம நீதிகள் எனக் கூறி
தர்க்க நெறியில் சாதிப்பர்; அந்நிலையில் தம் புல்லிய நெறிகளைக் கைவிட மாட்டார்; செய்வினை புகுந்து துன்பம் விளைவிக்கும் போது தம் பிரமக் கொள்கையைக் கைவிடுவர்; சாகும் பிரமங்களாகிய இவர்கள் தம்மைப் பிரமம் எனச் சொல்லும் அறிவு தாம்புக் கயிறைப் பாம்பென்று எண்ணும் மயக்க அறிவேயாகும்.

No comments:

Post a Comment