தெய்வ மணிமாலை - 12
பார்கொண்ட நடையில் வன்பசி கொண்டு வந்திரப்
பார் முகம் பார்த்திரங்கும்
பண்புநின் திருவடிக் கன்புநிறை யாயுளும்
பதியு நன்னிதியு முணர்வும்
சீர்கொண்ட நிறையுமுட் பொறையு மெய்ப்புகழும் நோய்த்
தீமையொரு சற்று மணுகாத்
திறமுமெய்த் திடமு நல்லிடமு நின்னடியர் புகழ்
செப்புகின்றோ ரடைவர்காண்
கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலு மயிலுமொரு
கோழியங் கொடியும் விண்ணோர்
கோமான்றன் மகளுமொரு மாமான்றன் மகளுமால்
கொண்ட நின் கோல மறவேன்
தார்கொண்ட சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை :
பெரிய வீடுகள் நிறைந்த சென்னயிற் கந்த கோட்டத்துள்
விளங்கும் கந்த வேளே, தெய்வ மணியே,
மிகுந்த பசியுடன் இரப்பவரிடம் மனம் இரங்கும் பண்பும், உன் திருவடிக்கண்
அன்பும், நிறைந்த வாழ்நாளும், வீடும், நன்மை செய்ய செல்வமும், உணர்வும்,
சிறப்புடைய நிறையும், எதையும் பொறுத்துக் கொள்ளும் பொறுமையும், நிலைத்த
புகழும், நோயோ தீங்கோ ஒரு சிறிதும் அணுகா கூறுபாடும், மெய்வன்மையும்,
நல்லோர் உறையும் இடமும், உன் அடியார் புகழ் பேசுவோர் பெறுவார்களாக.
வேற்படையும், சேவற் கொடியும், மயில் ஊர்தியும் பொருந்திய தோற்றத்தையும்,
தெய்வானையும், வள்ளியும் காதல் கொண்ட நின் கோலத்தையும் நான் மறவேனாகுக.
No comments:
Post a Comment