தெய்வ மணிமாலை - 14
கானலிடை நீருமொரு கட்டையிற் கள்வனும்
காணுறு கயிற்றி லரவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்த பித்தளையி னிடையும்
மானலிற் கண்டுளம் மயங்கல்போற் கற்பனையை
மாயையிற் கண்டு வீணே
மனெயென்றும் மகவென்றும் உறவென்றும் நிதியென்றும்
வாழ்வென்றும் மான மென்றும்
ஊனலி னுடம்பென்றும் உளமென்றும்
உள்ளென்றும் வெளியென்றும் வான்
உலகென்றும் அளவறு விகாரமுறநின்ற வெனை
உண்மை யறிவித்த குருவே
தானமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
தான தருமம் மிகுந்த சென்னை கந்த கோட்டத்தில் எழுந்தருளும்
கந்த வேளே, தெய்வ மணியே, கானலில் நீரும், மரக்கட்டையில் கள்வனும்,
கயிற்றின்கண் பாம்பும், கிளிஞ்சலில் வெள்ளி போலவும், மெருகிட்ட பித்தளை
பொன் போலவும் ஒன்றுக்கொன்று ஒப்பத் தோன்றி உள்ளம் மயங்குவது போல, மனம்
காட்டும் மாயையைக் கண்டு மனைவி எனவும், மகவெனவும், உறவு எனவும், நிதி
எனவும், வாழ்வு எனவும், மானம் எனவும், உடம்பு எனவும், உயிர் எனவும்,
உள்ளமெனவும், உள் எனவும், வெளி எனவும், வான் எனவும், மண்ணுலகு எனவும்
நின்ற எனை உண்மை உணர்வித்த குருவே, உனக்கு என் வணக்கம்.
No comments:
Post a Comment