சடமாகி யின்பந் தராதாகி மிகுபெருஞ்
சஞ்சலா காரமாகிச்
சற்றாகி வெளிமயல் பற்றாகி யோடுமித்
தன்மை பெறு செல்வமந்தோ
விடமாகி யொரு கபட நடமாகி யாற்றிடை
விரைந்து செலும் வெள்ளமாகி
வேலை யயாகி யாங்கார வலையாகி முதிர்
வேனிலுறு மேக மாகிக்
கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
காலோடு நீராகியே
கற்பிலா மகளிர் போற் பொற்பிலா துழலுமிது
கருதாத வகை யருள்வாய்
தடமேவு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்ய மணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
சென்னைக் கந்த கோட்ட கந்தசாமிக் கடவுளே, தெய்வ மணியே, சடப்
பொருளாய், பெரும் மனக்கலக்கம் தரும் வடிவமாய், நிலையிலாத் தன்மையாய்
விளங்கும் செல்வம் தன்னையுடையவர்க்கு விஷமாய், உள்ளதை மறைத்து இல்லார்
போல் கபட நாடகமாடுவதற்கு ஏதுவாய், காட்டாற்று வெள்ளம் போல விரைந்து
நீங்கும் தன்மையுடையதாய், ஒருகால் அதிகமாவதும் ஒருகால் குறைவதுமாகிய
கடலலைப் போன்றதாய்,
வாய்க்கால் நீர் வேண்டும் நெல்லுக்கும், வேண்டாத புல்லுக்கும் பாய்வது
போல நல்லார் பொல்லார் என எவர்க்கும் பயன்படுவதாய் விளங்கும் செல்வத்தை
விரும்பாத வண்ணம் எனக்கு அருள் புரிக.
No comments:
Post a Comment