25 June 2010

தெய்வ மணிமாலை - 17

உப்புற்ற பாண்டமென வொன்பது துவாரத்துள்
உற்றசும் பொழுகு முடலை
உயர்கின்ற வானிடை யெறிந்தகல்லென்றும் மலையுற்றிழியு மருவி யென்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகமுறு
மின்னென்றும் வீசு காற்றின்
மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினை தந்த வெறுமாய வேட மென்றும்
கப்புற்ற பறவைக் குடம்பை யென்றும் பொய்த்த
கனவென்றும் நீரி லெழுதும்
கையெழுத் தென்றுமுட் கண்டு கொண்டதி லாசை
கைவிடே னென் செய்குவென்
தப்பற்ற சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
கந்தப் பெருமானே, தெய்வ மணியே, உப்பு வைத்த மட்பாண்டம்
போலப் புறத்தே நீரும் சீயும் கசியும் இவ்வுடம்பு , வானில் எறிந்த கல்
போல, மலையிலிருந்து விழும் அருவி போல, வேகமாய் வீசும் காற்றில் ஏற்றி
வைத்த விளக்கு போல, மழைமேகத்திடைத் தோன்றும் மின்னல் போல, காற்றில்
பறக்கும் பஞ்சு போல, மரக்கிளையிற் கட்டப்பட்ட பறவைக்கூடு போல, நீர்மேல்
எழுதும் எழுத்துப் போல இவ்வுடம்பு நிலையிலாதது. உப்பு வைத்த மட்பாண்டம்
போலப் புறத்தே நீரும் சீயும் கசியும் இவ்வுடம்பின் மீது ஆசை நீங்கி அருள்
செய்க .

No comments:

Post a Comment