26 June 2010

தெய்வ மணிமாலை - 18

எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற்றி ருக்கும் வெறுவாய்
எங்கள் பெருமானுனை வணங்காத மூடர்தலை
இகழ்விற கெடுக்குந் தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
கலநீர் சொரிந்த அழுகண்
கடவுணின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்திழவு கேட்கும் செவி
பந்தமற நினையெணாப் பாவிகள்தம் நெஞ்சம்
பகீரென நடுங்கும் நெஞ்சம்
பரமநின் றிருமுன்னர்க் குவியாத வஞ்சர்க்கை
பலியைற்க நீள் கொடுங்கை
சந்தமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
அழகான சென்னைக் கந்த கோட்டத்துள் விளங்கும் கந்த வேளே,
தெய்வ மணியே, உன்னை வாழ்த்தாத பேய் மக்களின் வாய், குடிக்கும்
கூழுக்காகப் பிறர் முன் ஏங்கி நிற்கும் வெறும் வாயாகும்; உனை வணங்கா மூட
மக்களின் தலை, எரிக்கப்படும் விறகு சுமக்கும் தலையாகும்; உன் ஞானத்
திருமேனியைக் காணா கீழ் மக்களின் கண்கள், புன்கணீர் சொறியும்
அழுங்கண்ணாகும்; உன் புகழைக் கேட்காத வீணர்களின் காது, கீழான சாவு
கேட்கும் காதுகளாகும்; பந்தம் அகற்ற அருளும் உனை எண்ணாத பாவிகளின்
நெஞ்சம், அச்சத்தால் பகீரென நடுங்கும் நெஞ்சம்; உன் முன் கூப்பாத கைகள்
பிறர்முன் பிச்சைப் பெற ஏதுவாய் வளையும் கைகள்; மேலும் அவரின் பிறப்பே
மண்ணுக்கு சுமையாகும்.

No comments:

Post a Comment