26 June 2010

தெய்வ மணிமாலை - 19

ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
ளமுதுண்டு உவந்த திருவாய்
அப்பநின் திருவடி வணங்னோர் தலைமுடி
யணிந்தோங்கி வாழுந்தலை
மெய்நின் திருமேனி கண்டபுண்ணியர் கண்கள்
மிக்கவொளி மேவு கண்கள்
வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
விழாச்சுபம் கேட்கும்செவி
துய்யநின் பதமெண்ணு மேலோர்க ணெஞ்சமெய்ச்
சுக ரூபமான நெஞ்சம்
தோன்றலுன் றிருமுன் குவித்த பெரியோர் கைகள்
சுவர்ண மிடுகின்ற கைகள்
சையமுயர் சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
மலையை விட புகழால் உயர்ந்த சென்னைக் கந்த கோட்ட பெருமானே,
தெய்வ மணியே, உன் புகழைப் பேசும் அருட்செல்வர்களின் வாய், அமுதுண்டு
மகிழும் திருவாயாகும்;
உன் திருவடியை வணங்கினவர் தலை, மணிமுடி அணியும் சிறப்பான தலையாகும்; உன்
திருமேனியைக் கண்டு மகிழும் புண்ணியர்களின் கண்கள், அருளொளி பொருந்திய
கண்கள்; உன் புகழைப் பிறர் சொல்லக் கேட்கும் வித்தகரின் காதுகள், மணவிழா
முதலிய சுபச் செய்திகளையே கேட்கும் திருச்செவிகளாகும்; உன் பாதத்தை
எண்ணும் மேலோர்களின் நெஞ்சம், மெய்யான சுகவடிவான நெஞ்சமாகும்; உன்னை
வணங்கும் கைகள் பொன்னை வாரி வழங்கும் கைகள்;
அத்தகைய மேன்மையானவர்களின் புகழை வேறென்ன சொல்ல?

No comments:

Post a Comment