26 June 2010

தெய்வ மணிமாலை - 20

உழலுற்ற வுழவுமுத லுறுதொழி லியற்றிமலம்
ஒத்தபல பொருளீட்டி வீண்
உறுவயிறு நிறைய வெண் சோறடைத் திவ்வுடலை
ஒதிபோல் வளர்த்து நாளும்
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினே னையவிவ்
வெய்யவுடல் பொய் யென்கிலேன்
வெளிமயக் கோமாய விடமயக்கோ வெனது
விதி மயக்கோ வறிகிலேன்
கழலுற்ற நின்றுணைக் கான்மலர் வணங்கிநின்
கருணையை விழைந்து கொண்டெம்
களைகணே யீராறு கண்கொண்ட வென்றனிரு
கண்ணே யெனப் புகழ்கிலேன்
தழைவுற்ற சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
கந்த வேளே, சைவமணியே, தெய்வ மணியே, உழவு முதலான தொழில்கள்
செய்து பலவகையான பொருளைத் தேடிக் குவித்து வீணான வயிறால் இவ்வுடம்பை ஒதி
மரம் போல நாளும் வளர்த்து வீழும் இவ்வாழ்வை விரும்பினேன்; இவ்வுடம்பை
பொய்யென எண்ணவில்லை; இதற்கு காரணம் தோற்ற மயக்கமோ, பிறவி மயக்கமோ, என்
விதி செயும் மயக்கமோ அறியமுடியவில்லை.
அதனால் உன் திருவடிகளை வணங்கவில்லை. உன் பன்னிரண்டு கண்களை புகழவில்லை;
என் மயக்கத்தை ஒழித்து அருள் புரிக

No comments:

Post a Comment