வானமெங் கேயமுத பானமெங்கே யமரர்
வாழ்க்கை யபிமான மெங்கே
மாட்சி யெங்கே யவர்கள் சூழ்ச்சி யெங்கே தேவ மன்னனர சாட்சி யெங்கே
ஞான மெங்கே முனிவர் மோன மெங்கே யந்த
நான்முகன் செய்கை யெங்கே
நாரணன் காத்தலை நடத்த லெங்கே மறை
நவின்றிடு மொழுக்க மெங்கே
ஈனமங்கே செய்த தாருகனை ஆயிர
விலக்கமுறு சிங்க முகனை
எண்ணரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
ஈந்துபணி கொண்டிலை யெனில்
தானமிங் கேர்சென்னைக் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை :
கந்த பெருமானே, சண்முகங்களையுடைய தெய்வ மணியே,
தாருகாசுரனிடமும், சிங்கமுகாசுரனிடமும், சூரனிடமும் போர் புரிந்து பின்
அவர்களுக்கு நல்லறிவு தந்து தன் திருவடியை வணங்குவித்தாய்; உன் கருணை
இல்லையேல் வானுலகமோ, அமுதபானமோ, வானவரின் வாழ்வோ, அவர்களின் தேவரெனும்
அபிமானமோ, மாட்சிமையோ, இந்திரனின் ஆட்சியோ இல்லாது மறைந்திருக்கும்;
ஞானமோ, முனிவர்களின் தவமோ, பிரம தேவனின் படைப்புத் தொழிலோ, திருமாலின்
காத்தல் தொழிலோ, வேதங்கள் உரைக்கும் ஒழுக்கமோ நடைப்பெற்றிருக்காது.
No comments:
Post a Comment