27 June 2010

தெய்வ மணிமாலை - 22

மனமான வொருசிறுவன் மதியான குருவையும்
மதித்திடா னின்னடிச் சீர்
மகிழ்கல்வி கற்றிடான் சும்மா விரான்காம
மடுவினிடை வீழ்ந்து சுழல்வான்
சினமான வெஞ்சுரத் துழலுவனு லோபமாம்
சிறுகுகையி னூடு புகுவான்
செறுமோக விருளிடைச் செல்குவான் மதமெனும்
செய்குன்றி லேறி விழுவான்
இனமான மாச்சரிய வெங்குழியி னுள்ளே
இறங்குவான் சிறிது மந்தோ
என்சொல் கேளானெனது கைப்படான் மற்றிதற்
கேழையே னென்செய்குவேன்
தனநீடு சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
கந்த வேளே, சைவமணியே, தெய்வமணியே, என் மனமாகிய சிறுவன்
அறிவாகிய குருவையும் மதிப்பதில்லை; உன் திருவடிப்புகழை உரைக்கும்
கல்வியைக் கற்கவுமில்லை; சும்மா இருக்கவுமில்லை;
காமம் எனும் மடுவில் வீழ்ந்து சுழல்கிறான்;
சினம் எனும் வெம்மை நிலவும் நிலத்தில் திரிகிறான்;
உலோபம் எனும் சிறு குகையில் புகுந்து கொள்கிறான்;
மோகம் எனும் இருளில் இடர்படுகிறான்;
மதம் எனும் குன்றின் மேல் ஏறிக் குப்புற வீழ்கிறான்;
மாற்சரியம் எனும் குழியில் இறங்குகிறான்;
அந்தோ, என் சொல்லைக் கேளாவிட்டாலும் அவன் என் கைக்கு அகப்படுகிறானில்லை.
இதற்கு ஏழையாகிய நான் என்ன செய்வேன்? நீ தான் துணை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment