27 June 2010

தெய்வ மணிமாலை -23

வாய்கொண் டுரைத்தலரி தென்செய்கே னென்செய்கேன்
வள்ளலுன் சேவடிக் கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலு மெனது மனது
பேய்கொண்டு கள்ளுண்டு கோலினான் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதை விளையாடு பந்தோ
காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங்கோ பெருங்
காற்றினாற் சுழல் கறங்கோ
காலவடிவோ இந்த்ர சாலவடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன்
தாய்கொண்ட சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
தாய்மைச் செயல் சிறந்த சென்னைக் கந்தக்கோட்டத்தில்
எழுந்தருளியுள்ள கந்த வேளே, தெய்வ மணியே, என் மன இயல்பை வாயால் உரைக்க
முடியாது;
எளியேன் என் செய்வேன்;
வள்ளலாகிய உன் சேவடிக்கண் என் மனம் நில்லாமல் பொன்னாசை, மண்ணாசை,
பெண்ணாசை கொண்டு உழல்கிறது.
மேலும், என் மனம் பேய் பிடித்துக் கள் குடித்துக் கோலால் அடியுண்டு
பித்துபிடித்த குரங்கா, குயவனால் சுழற்றப்படும் சக்கரமா, சிறுவரால்
விளையாடப்படும் பந்தா, பிற உயிர் மேல் பாயும் கொடிய விலங்கா, காற்றில்
சுழலும் காற்றாடியா, காலன் வடிவா, இந்திர ஜால வடிவா, என் வினையின் வடிவா
இன்னதென்று நான் அறியேன். இதனை உன் சேவடிக்கண் ஒன்றி நிற்குமாறு அருள்
செய்க.

No comments:

Post a Comment