கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி
கற்குநெறி தேர்ந்து கல்லேன்
கனிவு கொண்டுனது திருவடியை யொருகனவிலும்
கருதிலே னல்ல னல்லேன்
குற்றமே செய்வதென் குணமாகு மப்பெருங்
குற்றமெல் லாங்குணமெனக்
கொள்ளுவது நின்னருட் குணமாகும் என்னில் எண்
குறைதவிர்த் தருள் புரிகுவாய்
பெற்றமேல் வருமொரு பெருந்தகை யினருளுருப்
பெற்றழுந் தோங்கு சுடரே
பிரண வாகார சின்மய விமல சொருபமே
பேதமில் பரப் பிரமமே
தற்றகைய சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
தன்னளவில் அழகமைந்த சென்னைக் கந்த கோட்டத்துள் சிறக்கும்
கோயிலில் எழுந்தருளும் கந்தவேள் கடவுளே, தெய்வ மணியே, ஒப்பற்ற
சிவபெருமானுடைய அருளைப் பெற்று விளங்கும் சுடரே, ஓங்கார வடிவாய் ஞான
மயமாய் தூய உருவாய் திகழும் பிரமப் பொருளே,
கல்வியை கற்கும் நெறி அறிந்து நான் கற்றிலேன்;
கற்றுணர்ந்த மேன்மக்களோடு கூடி நிற்கவில்லை;
உள்ளம் உருகி உன் திருவடியைக் கனவிலும் நினைக்கவில்லை;
நல்ல பண்புடையவனும் அல்ல; குற்றம் செய்வதே என் குணமாகும்;
அக்குற்றங்களையெலாம் குணமாகக் கொண்டருளுவது உன் அருட் குணம் என்பதால் என்
குறைகளைப் பொறுத்தருளுக.
No comments:
Post a Comment