சேவலங் கொடிகொண்ட நினையன்றி வேறுசிறு
தேவரைச் சிந்தை செய்வோர்
செங்கனியை விட்டு வேப்பங் கனியை யுண்ணுமொரு
சிறுகருங் காக்கை நிகர்வார்
நாவலங் காரமற வேறுபுகழ் பேசிநின்
நற்புகழ் வழுத்தாத பேர்
நாய்ப்பால் விரும்பியான் றூய்ப்பாலை நயவாத
நவையுடைப் பேயராவார்
நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
நின்றுமற் றேவல் புரிவோர்
நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
நெடிய வெறு வீணராவர்
தாவலம் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
மருத வயல்கள் பொருந்திய சென்னையிற் விளங்கும் கந்த வேளே,
தண்ணிய ஒளி பொருந்திய தூய மணிகளுள் சைவமணியாய்த் திகழும் ஆறுமுகம் கொண்ட
தெய்வ மணியே,
சேவல் கொடியைக் கொண்ட உன்னை விட்டு வேறு தெய்வங்களை வழிபடுவோர்,
செவ்வாழைக் கனியை விட்டு வேப்பம் பழத்தை உண்ணும் காக்கைக்கு ஒப்பாவர்;
சொல்லழகின்றி வேறு புகழைப் பேசி உன் புகழை ஓதாதோர் நாயின் பாலை விரும்பி
பசுவின் தூய பாலை விரும்பாத பேய் மக்களாவர்;
உன் பொருட்டு ஏவின பணி புரியாமல் பிறர்க்கு அரும்பணி செய்பவர்,
நெல்லுக்கு நீர் இறைக்காமல் புல்லுக்கு இறைக்கும் வீணராவர்.
No comments:
Post a Comment