29 June 2010

தெய்வ மணிமாலை - 27

பிரமனினி யென்னைப் பிறப்பிக்க வல்லனோ
பெய்சிறையி லின்னும் ஒருகால்
பின்பட்டு நிற்குமோ முன்பட்ட குட்டில்
பெறுந் துயர் மறந்து விடுமோ
இரவுநிற முடையியமன் இனியெனைக் கனவினும்
இறப்பிக்க வெண்ண முறுமோ
எண்ணுறா னுதையுண்டு சிதையுண்ட தன்னுடல்
இருந்த வடு எண்ணுறானோ
கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனையொரு
காசுக்கு மதியே னெலாம்
கற்றவர்கள் பற்றுநின் திருவருளை யானும்
கலந்திடப் பெற்று நின்றேன்
தரமருவு சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

உரை:
மேன்மை பொருந்திய சென்னை கந்தசாமிக் கடவுளே, தெய்வ மணியே,
பெரியோர்கள் பற்றாக நினைக்கும் உன் திருவருளில் யானும் கலந்து கொள்ளும்
பேறு பெற்றேன் ஆதலால், பிரமதேவன் எனை மீண்டும் பிறக்கச் செய்யும்
வலிமையுடையவனா?
பிரணவப் பொருளை சொல்லாததால் நீ பிரமனை சிறையிலடைத்ததையையும், அதற்கு முன்
அவன் துன்புற நீ குட்டியதையும் மறந்திருப்பானோ?
எமன் எனை இப்பொழுது இறக்கச் செய்ய கனவிலும் நினைப்பானோ?
மார்க்கண்டன் பொருட்டு சிவபெருமானால் உதையுண்டு புண்பட்டு ஆறிய தன் வடுவை
நினைப்பானோ?
மறைந்திருந்து தாக்கும் வினையை ஒரு காசுக்குக் கூட மதிக்க மாட்டேன்

No comments:

Post a Comment