29 June 2010

தெய்வ மணிமாலை - 28

நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற
நிலனுண்டு பலனுமுண்டு
நிதியுண்டு துதியுண்டு மதியுண்டு கதிகொண்ட
நெறியுண்டு நிலையு முண்டு
ஊருண்டு பேருண்டு மணியுண்டு பணியுண்டு
உடையுண்டு கொடையு முண்டு
உண்டுண்டு மகிழவே யுணவுண்டு சாந்தமுறும்
உளமுண்டு வளமு முண்டு
தேருண்டு கரியுண்டு பரியுண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவுமுண்டு
தேனுண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியான முண்டாயி னரசே
தாருண்ட சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
உயரிய மாடி வீடுகள் நிறைந்த சென்னைக் கந்த கோட்டத்துள்
கோவில் கொண்டருளும் கந்த வேளே, தெய்வ மணியே, தேனையுண்ணும் வண்டு இனம்
சூழும் கடம்பமாலையணியும் உன் திருவடிகளைத் தியானிப்போர்க்கு,
நீர்நிலைகளில் உள்ள நீரை முகந்து பெய்யும் கார்முகிலின் தண்ணீரை உண்டு
விளையும் நிலபுலங்களும் அவற்றால் எய்தும் பயனும் உண்டாகும்;
அதனால் நிதியுண்டாகும்;
புகழ் உண்டாகும்;
நல்ல அறிவுண்டாகும்;
உயர்கதி பெறும் நெறியும் அதனால் எய்தப்படும் நிலையும் உண்டாகும்;
ஊரும் பேரும் உண்டாகும்;
நவமணிகள் பதித்த ஆபரணங்களும் உண்டாகும்;
உயர்ந்த ஆடைகளும் உண்டாகும்;
இல்லாதவர்க்கு கொடுக்கும் ஈகைச் செயலும் உண்டாகும்;
இனியன உண்டுமகிழ மேலான உணவும் உண்டாகும்;
உள்ளத்தில் சாந்தமும் ஞான உணர்வும் உண்டாகும்;
ஊர்தியாய் தேரும் யானையும் குதிரையும் மற்றும் செல்வங்கள் அனைத்தும் உண்டாகும்.

No comments:

Post a Comment