உளமெனது வசநின்ற தில்லையென் தொல்லைவினை
ஒல்லைவிட் டிடவு மில்லை
உன்பதத் தன்பில்லை யென்றனக் குற்றதுணை
யுனையன்றி வேறுமில்லை
இளையனவ னுக்கருள வேண்டுமென் றுன்பால்
இசைக்கின்ற பேருமில்லை
ஏழையவனுக் கருள்வ தேனென்று னெதிர்நின்று
இயம்புகின் றோரு மில்லை
வளமருவு முனது திருவருள் குறைவ தில்லைமேல்
மற்றொரு வழக்கு மில்லை
வந்திரப் போர்களுக் கிலையென்ப தில்லைநீ
வன்மனத் தவனு மல்லை
தளர்விலாச் சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
கந்த வேளே, தெய்வ மணியே, என் உள்ளம் என்வசமாய் நிற்பதில்லை;
என் முன்வினையும் விரைவில் விட்டு நீங்கவில்லை; உன் திருவடியில் அன்பு
செய்வதுமில்லை; எனக்கு உற்ற துணை உனையன்றி யாருமில்லை; இவனுக்கு அருள்
செய்யவேண்டும் என உன்னிடம் எனக்காக எடுத்துரைப்பவருமில்லை; அவனுக்கு
அருள் புரிவது எதற்கு என உன் திருமுன் நின்று எனை எதிர்த்து
மொழிபவருமில்லை; உன் அருட்செல்வம் குறைந்து போவதுமில்லை; உன்னிடம்
இரப்பவர்க்கு இல்லையென நீ சொல்வதும் கிடையாது; நிலைமை இவ்வாறிருக்க உன்
அருள் பெறாது நான் வருந்துவதற்கு காரணம் அறியேன்.
No comments:
Post a Comment