எத்திக்கு மென்னுளம் தித்திக்கும் இன்பமே
என்னுயிர்க் குயிராகு மோர்
ஏகமே ஆனந்த போகமே யோகமே
என்பெருஞ் செல்வமே நன்
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
மூர்த்தியே முடிவிலாத
முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
முத்தாடும் அருமை மகனே
பத்திக்கு வந்தருள் பரிந்தருளும் நின்னடிப்
பற்றருளி யென்னை யிந்தப்
படியிலே யுழல்கின்ற குடியிலே ஒருவனாப்
பண்ணாம லாண்டருளுவாய்
சத்திக்கு நீர்ச் சென்னைக் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
முழங்குகின்ற கடற்கரையில் உள்ள சென்னை நகர் கந்தகோட்ட
கந்தசாமிக் கடவுளே, தெய்வ மணியே, எப்பக்கம் நோக்கினும் உள்ளத்தில் தோன்றி
இனிக்கும் இன்ப வடிவே, என் உயிர்க்குயிராய் விளங்கும் தனிப் பொருளே,
ஆனந்த போகம் தருபவனே, எனக்கு கிடைத்த பெருஞ் செல்வமே, முக்திப்
பேற்றுக்கு முழுமுதலான பெருமானே, மெய்யுணர்வின் உருவே, முடிவிலாத முருகப்
பெருமானே, நெடியோனாகிய திருமால் மருமகனே, சிவபெருமான் முத்தமிட்டு
இன்புறும் அரிய மகனே, உன் திருவடியை எனக்குப் பற்றாக உதவி இவ்வுலகில்
திரியும் குடிகளில் ஒருவனாக்காமல் ஆட் கொண்டருளுவாயாக.
No comments:
Post a Comment