02 July 2010

தெய்வ மணிமாலை - 31

நான்கொண்ட விரதநின் னடியலாற் பிறர்தமை
நாடாமை யாகுமிந்த
நல்விரத மாங்கனியை இன்மையெனு மொருதுட்ட
நாய்வந்து கவ்வி யந்தோ
தான்கொண்டு போவதினி யென்செய்வே னென்செய்வேன்
தளராமை யென்னும் ஒருகைத்
தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
தன்முகம் பார்த் தருளுவாய்
வான்கொண்ட தெள்ளமுத வாரியே மிகுகருணை
மழையே மழைக் கொண்டலே
வள்ளலே யென்னிருகண் மணியே யெனின்பமே
மயிலேறு மாணிக்கமே
தான்கொண்ட சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
கந்தவேள் கடவுளே, தெய்வ மணியே, தெள்ளிய அமுதக்கடல்
உருவாயவனே; கருணையாகிய மழையே; அம்மழையைப் பொழியும் மேகமே, வள்ளலே, என்
கண்ணின் மணி போல்பவனே, யான் பெறும் இன்ப வடிவே, மயில் மேல் அமர்ந்து
வரும் மாணிக்க மணியே, நான் கொண்ட கொள்கை நின் திருவடியன்றிப் பிறரை
நாடிச் செல்லாமையாகும்; இந்த கொள்கையாகிய கனியை வறுமையெனும் ஒரு
துட்டதனம் படைத்த நாய் தன் வாயாற் கவ்வி ஓடுகிறதே, நான் என்ன செய்வேன்?
தளர்ச்சியிலாமை என்ற கைத்தடி கொண்டு அடித்துத் துரத்த வலிமையில்லைதவனாக
உளேன்; அதனால் என் முகம் பார்த்து அருள் நல்க வேண்டுகிறேன்.

தெய்வ மணிமாலை முற்றிற்று.

No comments:

Post a Comment