தெய்வ மணிமாலை - 4
வள்ளலுனை யுள்ளபடி வாழ்த்துகின்றோர்
மதித்திடுவ தன்றி மற்றை
வானவரை மதியென்னி னானவரை யொருகனவின்
மாட்டினும் மறந்து மதியேன்
கள்ளமறு முள்ளமுறு நின் பதமலால் வேறு
கடவுளர் பதத்தை யவர்என்
கண்ணெதிர் அடுத்தைய நண்ணென வளிப்பினும்
கடுவென வெறுத்து நிற்பேன்
எவ்வளவு மிம்மொழியி லேசுமொழி யன்றுண்மை
என்னை யாண்டருள் புரிகுவாய்
என் தந்தையே யெனது தாயே யென் இன்பமே
என்றனறிவே யென்னன்பே
தள்ளரிய சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
கந்தகோட்டத்துள் விளங்கும் கந்த வேளே, சண்முகம் படைத்த தெய்வமணி
யாயவனே, எனக்குத்தந்தையும், தாயுமாய், இன்பமும், அறிவும்
அன்புமாயிருப்பவனே, வள்ளலாகிய உன்னை உண்மையாக வாழ்த்தி வழிபடுபவர்களை
நன்கு மதிக்காமல் வானவர்களை மதித்தொழுக என சொன்னால் அவர்களைக் கனவிலும்
ஒருமுறையேனும் மறந்தும் மதிக்க மாட்டேன்; உன் திருவடியை யன்றி, வேறு
தெய்வங்களின் பாதத்தை அவர்கள் என்கண் காணநின்று வழிபடு என
அருளிச்செய்யினும் விடமெனக் கருதி வெறுத்து விலகி விடுவேன். இவ்வாறு
கூறும் என் சொற்கள் அவர்களை இகழும் குறிப்புடையன அல்ல; என்னை ஆட்கொண்டு
அருள் புரிக.
No comments:
Post a Comment