தெய்வ மணி மாலை - 5
பதி பூசை முதலநற் கிரியையான் மனமெனும்
பசுகரணம் ஈங்க சுத்த
பாவனை யறச்சுத்த பாவனையில் நிற்குமெய்ப்
பதியோக நிலைமை யதனால்
மதிபாச மற்றதி னடங்கிடு மடங்கவே
மலைவில் மெய்ஞ்ஞான மயமாய்
வரவு போக்கற்ற நிலை கூடுமென வெனதுளே
வந்துணர்வு தந்த குருவே
துதிவாய்மை பெறுசாந்த பதமேவு மதியமே
துரிசறு சுயஞ் சோதியே
தோகை வாகனமீ திலங்கவரு தோன்றலே
சொல்லரிய நல்ல துணையே
ததிபெறும் சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
கந்த கோட்டத்தினுள் வீற்றிருக்கும் கந்த வேளே, சண்முகங்களையுடைய தெய்வ
மணியே, துவாத சாந்த நிலையில் காட்சி வழங்கும் அமுத சந்திரணே, சுயம்
பிரகாச வடிவே, மயிலாகிய வாகனத்தில் ஞானக்கண் காணத்தோன்றும் பெருமானே,
நல்ல துணைவனே, சிவபூசை முதலான செயல் வகைகளால் மனமாகிய பசுகரணம்
இவ்விடத்து அசுத்தமான பாவனைகள் உற்ற அழுக்குகள் நீங்கவே, தூய சிவநினைவில்
நிலை பெறும்; ஆங்குத் தோன்றும் சிவயோகத்தால் பாச வகைகள் நீங்கிச்
சிவத்தின்கண் அடங்கி யொழியும்; பிறவிச் சுழலில் புகுதலும் மீளலும் இல்லா
சிவபோக நிலை வந்தடையும் என அறிவுரை அளித்த குருமுர்த்தியே வணக்கம்.
No comments:
Post a Comment