22 July 2010

எண்ணப்பத்து - 10

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 81
கண்ட னேகவா னவர்தொழும் நின்திருக்
கழலிணை தனக்காசை
கொண்ட னேகமாய்த் தெண்டனிட் டானந்தக்
கூத்தினை யுகந்தாடித்
தொண்ட னேனும்நின் அடியரிற் செறிவனோ
துயருழந் தலைவேனோ
அண்ட னேதிருத் தணிகைவாழ் அண்ணலே
அணி கொள்வேல் கரத்தோனே.

உரை:
திருத்தணிகையில் எழுந்தருளும் முருகப் பெருமானே, அழகு
பொருந்திய வேற்படை ஏந்தும் கையை உடையவனே, தேவ தேவனே, தேவர்கள் கண்ணாரக்
கண்டு பரவுகின்ற உன் கழலணிந்த திருவடியின்பால் ஆர்வமுற்றுப் பற்பல
தெண்டனிட்டு வணங்கி ஆனந்தக் கூத்தினை விருப்புடன் ஆடித் தொண்டனாகிய
யானும் உன் அடியார் கூட்டத்தில் பொருந்துவேனோ, அன்றிப் பிறவித்
துன்புற்று வருந்தி அலைவேனோ, ஒன்றும் தெரிந்திலேன்.

No comments:

Post a Comment