திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 82
ஊணே யுடையே பொருளேயென்
றுருகி மனது தடுமாறி
வீணே துயரத் தழுந்துகின்றேன்
வேறோர் துணைநின் னடியன்றிக்
காணே னமுதே பெருங்கருணைக்
கடலே கனியே கரும்பேநல்
சேணேர் தணிகை மலைமருந்தே
தேனே ஞானச் செழுஞ்சுடரே.
உரை:
நல்ல உயரம் பொருந்திய தணிகை மலையில் எழுந்தருளுபவனே, மருந்து
போல்பவனே, தேனே, ஞானச் செழுமையுடைய ஒளியே, அமுதமாகிய பெரிய அருட்கடலே,
இனிய கனியே, கரும்பு போல்பவனே, உணவுக்கும் உடைக்கும் பொருளுக்கும்
நினைவுகளைச் செலுத்தி மனதில் தடுமாற்றம் எய்தி வீணாகத் துயரத்தில்
ஆழ்ந்து வருந்துகின்ற யான் உன்னை யொழிய வேறே ஒருவரும் துணையாக
காண்கிறேனில்லை. செழுஞ்சுடரே,எனக்கு அருள்புரிக.
No comments:
Post a Comment