திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 83
பாரும் விசும்பும் அறியவெனைப்
பயந்த தாயும் தந்தையும்நீ
ஓரும் போதிங் கெனிலெளியேன்
ஓயாத் துயருற்றிட னன்றோ
யாருங் காண வுனைவாதுக்
கிழுப்பே னன்றி யென்செய்கேன்
சேரும் தணிகை மலைமருந்தே
தேனே ஞானச் செழுஞ்சுடரே.
உரை:
திரண்டுயர்ந்து விளங்கும் தணிகை மலைமேல் எழுந்தருளும்
மருந்தும் தேனும் ஞானச் செழுஞ்சுடருமாய் விளங்குபவனே, மண்ணுலக மக்களும்
விண்ணுலகத் தேவரும் நன்கறிய இவ்வுலகில் என்னைப் பெற்ற தாயும் தந்தையும்
நீயாவாய் என்பதை எண்ணும் போது எளியனாகிய யான் துயருற்று வருந்துவது
நன்றாகுமா ? யாவரும் கண்டு வியக்குமாறு உன்னோடு வாதம் புரிவதன்றி வேறே
என்ன யான் செய்ய வல்லேன் ?
No comments:
Post a Comment