22 July 2010

செழுஞ்சுடர்மாலை - 3

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 84
கஞ்சன் துதிக்கும் பொருளேயென்
கண்ணே நின்னைக் கருதாத
வஞ்சர் கொடிய முகம்பார்க்க
மாட்டே னினியென் வருத்தமறுத்
தஞ்ச லெனவந் தருளாயெல்
ஆற்றேன் கண்டாய் அடியேனே
செஞ்சந் தனஞ்சேர் தணிகைமலைத்
தேனே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:
செவ்விய சந்தன மரங்கள் வளர்ந்துள்ள தணிகை மலையில்
எழுந்தருளுபவனே, தேன் என இனிக்கும் ஞானச் செழுஞ் சுடரே, முருகப்பெருமானே,
பிரமன் வணங்கித் துதிக்கும் மெய்ப்பொருளே, என் கண்ணே, உன் திருவடியை
நினைக்காத வஞ்ச நெஞ்சர்களின் கொடுமை பொருந்திய முகத்தைப் பார்க்க
மாட்டேன். ஆதலால், என் வருத்தத்தைப் போக்கி அடியேன் முன் வந்தருளி
அஞ்சேல் என அருளுக. மேன்மேலும் மிகும் வருத்தத்தை ஆற்றேனாகிறேன்.

No comments:

Post a Comment