16 July 2010

பிரார்த்தனை மாலை - 13

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 54
உனக்கே விழைவு கொண் டோலமிட்
டோங்கி யுலறுகின்றேன்
எனக்கே யருளித் தமியேன் பிழையுளத்
தெண்ணி யிடேல்
புனக்கேழ் மணிவல்லியைப் புணர்ந் தாண்டருள்
புண்ணியனே
மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர்
வானவனே.

உரை:
மனக்கவலையைப் போக்கும் தணிகை மலையில் அமர்ந்துள்ள தேவனே,
தினைப்புனத்தில் வளர்ந்த மரகதமணி போன்ற வள்ளியுடன் கூடி உலகுயிர்களைக்
காத்தருளும் புண்ணிய மூர்த்தியே, உன்மேல் விருப்பமுற்று ஓலமிட்டு நா
உலர்ந்து, மேனி வற்றி வாடும் எனக்கு அருள் தருவாயாக; உலகத்தொடர்பற்று
நிற்கும் என் பிழைகளை உன் திருவுள்ளத்தில் கொள்ள வேண்டா.

No comments:

Post a Comment