திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 73
சேல் பிடித்தவன் தந்தை யாதியர் தொழும்
தெய்வமே சிவப்பேறே
மால் பிடித்தவர் அறியொணாத் தணிகைமா
மலை யமாந்திடு வாழ்வே
வேல் பிடித்தருள் வள்ளலே யான் சதுர்
வேதமும் காணா நின்
கால் பிடிக்கவும் கருணைநீ செய்யவும்
கண்டுகண் களிப்பேனோ.
உரை:
ஐயம் திரிபுகளாகிய மயக்க வுணர்வுடையவர் அறிய முடியாத தணிகை
மலையில் எழுந்தருளும் பெருமானே, மீன் எழுதிய கொடியை உடைய காமனுக்குத்
தந்தையாகிய திருமால் முதலிய தேவர்கள் தொழுது பரவும் தெய்வமே, சிவபெருமான்
பெற்ற செல்வமே, வேற்படை ஏந்தும் வள்ளலே, வேதங்கள் நான்கும் கண்டறியாத
நின் திருவடியை யான் சேரவும், எனக்கு நீ அருள் புரியவும் நேரில் கண்டு
மகிழ்வேனோ, கூறுக.
No comments:
Post a Comment