21 July 2010

எண்ணப்பத்து - 4

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 75
மயிலின் மீதுவந் தருள்தரும் நின்திரு
வரவினுக் கெதிர் பார்க்கும்
செயலினேன் கருத் தெவ்வணம் முடியுமோ
தெரிகிலேன் என்செய்கேன்
அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே
ஆறுமா முகத் தேவே
கயிலை நேர்திருத் தணிகையம் பதிதனில்
கந்த னென்றிருப் போனே.

உரை:
கயிலை மலை போன்ற திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும்
கந்தசாமிக் கடவுளே, வேற்படை கொண்டு சூரனது மாமரத்தை வேரோடு வீழ்த்திய
ஐயனே, ஆறுமுகங்களை உடைய தேவனே, மயில் மேல் அமர்ந்து அன்பர்கட்கு வரம்
அருளும் உன் செல்வ வருகையை நாளும் எதிர்பார்த்து உள்ளேன்; என் எண்ணம்
எவ்வாறு முடியுமோ, அறியேன்; அது நிறைவேன யான் என்ன செய்வது, அறியேன்.

No comments:

Post a Comment