21 July 2010

எண்ணப்பத்து - 5

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 76
இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை
எண்ணுறேல் இனி வஞ்சக்
கருப் புகாவணம் காத்தருள் ஐயனே
கருணையங் கடலே என்
விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே
வேலுடை யெம்மானே
தருப்புகா வினன் விலகுறும் தணிகை வாழ்
சாந்த சற்குணக் குன்றே.

உரை:
வானளாவி நிற்கும் மரங்களால் சூரியன் புகாமல் விலகிச்
செல்லும் தணிகை மலையில் எழுந்தருளுபவனே, சாந்தம் பொருந்திய சற்குணக்
குன்றாகிய முருகப் பெருமானே, வேற்படையை உடைய எங்கள் தலைவனே, என் அன்பில்
சுரந்து பெருகும் அமுதமே, அருட்கடலே, ஐயனே, இரும்பு போன்ற நெஞ்சினையுடைய
கொடியவனாகிய என் தவறுகளைத் திருவுளத்திற் கொள்ளாமல், வஞ்சம் மிக்க
பிறவிக்குள் யான் புகாவண்ணம் காத்தருள்க.

No comments:

Post a Comment