21 July 2010

எண்ணப்பத்து - 7

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 78
யாரையும் துணை கொண்டிலே னின்னடி
இணைதுணை யல்லானின்
பேரை யுன்னிவாழ்ந் திடும்படி செய்வாயோ
பாரையும் உயிர்ப் பரப்பையும் படைத்தருள்
பகவனே யுலகேத்தும்
சீரை யுற்றிடும் தணிகையங் கடவுணின்
திருவுளம் அறியேனே.

உரை:
உலகே துதிக்கும் சிறப்பு மிக்க தணிகைப் பதியில்
எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே, உலகனைத்தையும் உயிர்த் தொகைகளையும்
படைத்தருளும் பகவனே, உன் திருவடி இரண்டை தவிர வேறு யாரையும் எனக்குத்
துணையாகக் கொண்டிலேன். உன் திருப்பெயரையே நினைத்து வாழும்படி செய்வாயோ
அல்லது உலக மயக்கத்தில் ஆழ்ந்துறச் செய்வாயோ, உன் திருவுளம் யான்
அறியேன்.

No comments:

Post a Comment