திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 88
உண்டாற் குறையு மெனப்பசிக்கும்
உலுத்த ரசுத்த முகத்தையெதிர்
கண்டா னடுங்கி யொதுங்காது
கடைகாத் திரந்து கழிக்கின்றேன்
கொண்டா ரடியர் நின்னருளை
யானோ ஒருவன் குறைபட்டேன்
திண்டா ரணிவேல் தணிகைமலைத்
தேவே ஞானச் செழுஞ்சுடரே.
உரை:
திண்ணிய மாலை யணிந்த வேற்படையை உடையவனே, தணிகை மலைத் தெய்வமே,
ஞானச் செழுஞ்சுடரே, இருப்பதை உண்டால் அளவில் குறையுமென அஞ்சி உண்ணாமற்
பசித்திருக்கும் கீழான உலோபிகளின் அழுக்குடைய முகத்தைக் கண்டால், அஞ்சி
மனம் நடுங்கி நீங்கி யொழியாமல் அவர்களுடைய புறக்கடையில் நின்று இரந்து
காலத்தைக் கழிக்கின்றேன்; உனக்கு அடியாரான அனைவரும் உன் அருளைப் பெற்றுக்
கொண்டாராக, யான் ஒருவனே பெறாது குறைபடுகிறேன்; எனக்கு அருள் செய்க.
No comments:
Post a Comment