23 July 2010

செழுஞ்சுடர்மாலை - 7

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 88
உண்டாற் குறையு மெனப்பசிக்கும்
உலுத்த ரசுத்த முகத்தையெதிர்
கண்டா னடுங்கி யொதுங்காது
கடைகாத் திரந்து கழிக்கின்றேன்
கொண்டா ரடியர் நின்னருளை
யானோ ஒருவன் குறைபட்டேன்
திண்டா ரணிவேல் தணிகைமலைத்
தேவே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:
திண்ணிய மாலை யணிந்த வேற்படையை உடையவனே, தணிகை மலைத் தெய்வமே,
ஞானச் செழுஞ்சுடரே, இருப்பதை உண்டால் அளவில் குறையுமென அஞ்சி உண்ணாமற்
பசித்திருக்கும் கீழான உலோபிகளின் அழுக்குடைய முகத்தைக் கண்டால், அஞ்சி
மனம் நடுங்கி நீங்கி யொழியாமல் அவர்களுடைய புறக்கடையில் நின்று இரந்து
காலத்தைக் கழிக்கின்றேன்; உனக்கு அடியாரான அனைவரும் உன் அருளைப் பெற்றுக்
கொண்டாராக, யான் ஒருவனே பெறாது குறைபடுகிறேன்; எனக்கு அருள் செய்க.

செழுஞ்சுடர்மாலை - 6

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 87
அடுத்தே வருத்தும் துயர்க்கடலில்
அறியா தந்தோ விழுந்திட்டேன்
எடுத்தே விடுவார் தமைக்காணேன்
எந்தா யெளியேன் என்செய்கேன்
கடுத்தேர் கண்டத் தெம்மான்றன்
கண்ணே தருமக் கடலேஎன்
செடித்தீர் தணிகை மலைப்பொருளே
தேனே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:
குற்றமில்லாத தணிகை மலையில் எழுந்தருளும் பரம்பொருளே, தேனே,
ஞானச் செழுஞ் சுடரே, விடம் பொருந்திம கழுத்தை உடைய தலைவனாகிய சிவனின்
கண்ணே, அடுத்தடுத்து வந்து வருத்தும் துயரக்கடலில் அறிவு அறியாமையால்
வீழ்ந்து விட்டேன்; அதனினின்று எடுத்துக் கரையேற்றுவோர் ஒருவரையும்
காணவில்லை; எந்தையே, எளியனாகிய யான் என்ன செய்து உய்தி பெறுவேன்.

செழுஞ்சுடர்மாலை - 5

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 86
வளைத்தே வருத்தும் பெருந்துயரால்
வாடிச் சவலை மகவாகி
இளைத்தேன் தேற்றும் துணைகாணேன்
என்செய் துய்கேன் எந்தாயே
விளைத்தே னொழுகும் மலர்த்தருவே
விண்ணே விழிக்கு விருந்தேசீர்
திளைத்தோர் பரவும் திருத்தணிகைத்
தேவே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:
சான்றோர் போற்றும் திருத்தணிகையில் வீற்றிருக்கும் தெய்வமே,
ஞானச் செழுஞ்சுடரே, தேன் விளைந்து சொரியும் மலர்களையுடைய கற்பகத் தருவே,
கருணை மழையே, கண் களிக்கப் புதுமைக் காட்சி நல்கும் முருகப் பெருமானே,
என் மனத்தைச் சூழ்ந்து கொண்டு வருத்தும் பெருந்துயரால் உள்ளமும் உடம்பும்
மெலிவுற்றுச் சவலைக்குழந்தை போல் இளைத்துப் போனேன்; எனக்குத் துணை
புரிபவரையும் கண்டிலேன்; எந்தையே யான் யாது செய்து உய்தி பெறுவேன்,
அருளுக.

22 July 2010

செழுஞ்சுடர்மாலை - 4

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 85
மின்னே ருலக நடையதனால்
மேவுந் துயருக் காளாகிக்
கன்னேர் மனத்தேன் நினைமறந்தென்
கண்டேன் கண்டாய் கற்பகமே
பொன்னே கடவுண் மாமணியே
போதப் பொருளே பூரணமே
தென்னேர் தணிகை மலையரசே
தேவே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:
அழகார்ந்த தணிகையில் வீற்றிருக்கும் அருளரசே, தெய்வமே, ஞானச்
செழுஞ்சுடரே, கற்பகமே, பொன்னே, தெய்வமணியே, ஞானப் பொருளே, பூரணமே,
மின்னலைப் போல் நிலையின்றி மறையும் உலக வாழ்வில் வந்தடையும்
துன்பத்திற்கு உள்ளாகி மனம் கல்லாகி நின் திருவடியை மறந்து என்ன பயன்
கண்டேன். ஒன்றுமில்லை.

செழுஞ்சுடர்மாலை - 3

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 84
கஞ்சன் துதிக்கும் பொருளேயென்
கண்ணே நின்னைக் கருதாத
வஞ்சர் கொடிய முகம்பார்க்க
மாட்டே னினியென் வருத்தமறுத்
தஞ்ச லெனவந் தருளாயெல்
ஆற்றேன் கண்டாய் அடியேனே
செஞ்சந் தனஞ்சேர் தணிகைமலைத்
தேனே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:
செவ்விய சந்தன மரங்கள் வளர்ந்துள்ள தணிகை மலையில்
எழுந்தருளுபவனே, தேன் என இனிக்கும் ஞானச் செழுஞ் சுடரே, முருகப்பெருமானே,
பிரமன் வணங்கித் துதிக்கும் மெய்ப்பொருளே, என் கண்ணே, உன் திருவடியை
நினைக்காத வஞ்ச நெஞ்சர்களின் கொடுமை பொருந்திய முகத்தைப் பார்க்க
மாட்டேன். ஆதலால், என் வருத்தத்தைப் போக்கி அடியேன் முன் வந்தருளி
அஞ்சேல் என அருளுக. மேன்மேலும் மிகும் வருத்தத்தை ஆற்றேனாகிறேன்.

செழுஞ்சுடர்மாலை - 2

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 83
பாரும் விசும்பும் அறியவெனைப்
பயந்த தாயும் தந்தையும்நீ
ஓரும் போதிங் கெனிலெளியேன்
ஓயாத் துயருற்றிட னன்றோ
யாருங் காண வுனைவாதுக்
கிழுப்பே னன்றி யென்செய்கேன்
சேரும் தணிகை மலைமருந்தே
தேனே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:
திரண்டுயர்ந்து விளங்கும் தணிகை மலைமேல் எழுந்தருளும்
மருந்தும் தேனும் ஞானச் செழுஞ்சுடருமாய் விளங்குபவனே, மண்ணுலக மக்களும்
விண்ணுலகத் தேவரும் நன்கறிய இவ்வுலகில் என்னைப் பெற்ற தாயும் தந்தையும்
நீயாவாய் என்பதை எண்ணும் போது எளியனாகிய யான் துயருற்று வருந்துவது
நன்றாகுமா ? யாவரும் கண்டு வியக்குமாறு உன்னோடு வாதம் புரிவதன்றி வேறே
என்ன யான் செய்ய வல்லேன் ?

செழுஞ்சுடர்மாலை - 1

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 82
ஊணே யுடையே பொருளேயென்
றுருகி மனது தடுமாறி
வீணே துயரத் தழுந்துகின்றேன்
வேறோர் துணைநின் னடியன்றிக்
காணே னமுதே பெருங்கருணைக்
கடலே கனியே கரும்பேநல்
சேணேர் தணிகை மலைமருந்தே
தேனே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:
நல்ல உயரம் பொருந்திய தணிகை மலையில் எழுந்தருளுபவனே, மருந்து
போல்பவனே, தேனே, ஞானச் செழுமையுடைய ஒளியே, அமுதமாகிய பெரிய அருட்கடலே,
இனிய கனியே, கரும்பு போல்பவனே, உணவுக்கும் உடைக்கும் பொருளுக்கும்
நினைவுகளைச் செலுத்தி மனதில் தடுமாற்றம் எய்தி வீணாகத் துயரத்தில்
ஆழ்ந்து வருந்துகின்ற யான் உன்னை யொழிய வேறே ஒருவரும் துணையாக
காண்கிறேனில்லை. செழுஞ்சுடரே,எனக்கு அருள்புரிக.

எண்ணப்பத்து - 10

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 81
கண்ட னேகவா னவர்தொழும் நின்திருக்
கழலிணை தனக்காசை
கொண்ட னேகமாய்த் தெண்டனிட் டானந்தக்
கூத்தினை யுகந்தாடித்
தொண்ட னேனும்நின் அடியரிற் செறிவனோ
துயருழந் தலைவேனோ
அண்ட னேதிருத் தணிகைவாழ் அண்ணலே
அணி கொள்வேல் கரத்தோனே.

உரை:
திருத்தணிகையில் எழுந்தருளும் முருகப் பெருமானே, அழகு
பொருந்திய வேற்படை ஏந்தும் கையை உடையவனே, தேவ தேவனே, தேவர்கள் கண்ணாரக்
கண்டு பரவுகின்ற உன் கழலணிந்த திருவடியின்பால் ஆர்வமுற்றுப் பற்பல
தெண்டனிட்டு வணங்கி ஆனந்தக் கூத்தினை விருப்புடன் ஆடித் தொண்டனாகிய
யானும் உன் அடியார் கூட்டத்தில் பொருந்துவேனோ, அன்றிப் பிறவித்
துன்புற்று வருந்தி அலைவேனோ, ஒன்றும் தெரிந்திலேன்.

எண்ணப்பத்து - 9

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 80
தேவர் நாயக னாகியே என்மனச்
சிலைதனி லமர்ந்தோனே
மூவர் நாயக னெனமறை வாழ்த்திடும்
முத்தியின் வித்தே யிங்
கேவ ராயினும் நின்றிருத் தணிகைசென்
றிறைஞ்சிடி லவரேயென்
பாவ நாசஞ்செய் தென்றனை யாட்கொளும்
பரஞ்சுடர் கண்டாயே.

உரை:
தேவர்கட்கு நாயகனே, என் மனமாகிய கல்லில் பொறிக்கப்
பட்டிருப்பவனே, மூவர்கட் கெல்லாம் தலைவன் என மறைகள் துதிக்கும்
முக்திக்குக் காரணமாயவனே, உன் திருத்தணிகையை அடைந்து வணங்குபவர்
யாவராயினும் அவர்கள் என் பாவ வினைகளைப் போக்கி என்னை ஆட்கொண்டருளும்
பரஞ்சுடராவர்.

21 July 2010

எண்ணப்பத்து - 8

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 79
உளங்கொள் வஞ்சக நெஞ்சர் தம்மிடமிட
ருழந்தகம் உலைவுற்றேன்
வளங்கொள் நின்பத மலர்களை நாடொறும்
வாழ்த்திலே னென்செய்கேன்
குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும்
குறிக்கரும் பெருவாழ்வே
தளங்கொள் பொய்கைசூழ் தணிகையம் பதியில்வாழ்
தனிப்பெரும் புகழ்த் தேவே.

உரை:
பொய்கைகள் சூழ்ந்த தணிகைப் பதியில் எழுந்தருளுபவனே, தனித்த
பெரும் புகழை உடைய தேவ தேவனே, நெற்றி கண்ணையுடைய சிவனும், கரிய நிறமுடைய
திருமாலும் பிரமதேவனும் குறிக்கொண்டு பரவுதற்குரிய பெருவாழ்வே, வஞ்ச
நினைவுடையவர்களிடம் சென்று துன்புற்று மனம் வருந்தினேனன்று அருள்வளம்
மிக்க உன் திருவடித் தாமரைகளை நாளும் வாழ்த்தி வணங்கவில்லை; இனி யான்
என்ன செய்வேன் ?

எண்ணப்பத்து - 7

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 78
யாரையும் துணை கொண்டிலே னின்னடி
இணைதுணை யல்லானின்
பேரை யுன்னிவாழ்ந் திடும்படி செய்வாயோ
பாரையும் உயிர்ப் பரப்பையும் படைத்தருள்
பகவனே யுலகேத்தும்
சீரை யுற்றிடும் தணிகையங் கடவுணின்
திருவுளம் அறியேனே.

உரை:
உலகே துதிக்கும் சிறப்பு மிக்க தணிகைப் பதியில்
எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே, உலகனைத்தையும் உயிர்த் தொகைகளையும்
படைத்தருளும் பகவனே, உன் திருவடி இரண்டை தவிர வேறு யாரையும் எனக்குத்
துணையாகக் கொண்டிலேன். உன் திருப்பெயரையே நினைத்து வாழும்படி செய்வாயோ
அல்லது உலக மயக்கத்தில் ஆழ்ந்துறச் செய்வாயோ, உன் திருவுளம் யான்
அறியேன்.

எண்ணப்பத்து - 6

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 77
குன்றுநேர் பிணித் துயரினால் வருந்திநின்
குரைகழல் கருதாத
துன்று வஞ்சகக் கள்ளனே னெஞ்சகத்
துயரறுத் தருள்செய்வான்
இன்று மாமயின் மீதினில் ஏறியிவ்
வேழைமுன் வருவாயேல்
நன்று நன்றதற் கென்சொல்வார் தணிகைவாழ்
நாதநின் னடியாரே.

உரை:
தணிகை மலையில் எழுந்தருளும் நாதனே, மலைபோல் தோன்றும் நோய்
விளைவிக்கும் துன்பத்தால் மனம் வருந்தி, வீரக்கண்டை அணிந்த உன்
திருவடிகளை நினையாமல், வஞ்சகமும் கள்ளத்தனமும் உடைய நெஞ்சினால் வரும்
துன்பத்தைப் போக்கும் பொருட்டு என்முன் மயில் மேல் நீ வந்தருள்வாயின்,
நன்று; உன் அடியார்கள் நன்று நன்றென்று உன் அருளைப் பாராட்டாமல் வேறே
என்ன சொல்வார்கள் !

எண்ணப்பத்து - 5

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 76
இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை
எண்ணுறேல் இனி வஞ்சக்
கருப் புகாவணம் காத்தருள் ஐயனே
கருணையங் கடலே என்
விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே
வேலுடை யெம்மானே
தருப்புகா வினன் விலகுறும் தணிகை வாழ்
சாந்த சற்குணக் குன்றே.

உரை:
வானளாவி நிற்கும் மரங்களால் சூரியன் புகாமல் விலகிச்
செல்லும் தணிகை மலையில் எழுந்தருளுபவனே, சாந்தம் பொருந்திய சற்குணக்
குன்றாகிய முருகப் பெருமானே, வேற்படையை உடைய எங்கள் தலைவனே, என் அன்பில்
சுரந்து பெருகும் அமுதமே, அருட்கடலே, ஐயனே, இரும்பு போன்ற நெஞ்சினையுடைய
கொடியவனாகிய என் தவறுகளைத் திருவுளத்திற் கொள்ளாமல், வஞ்சம் மிக்க
பிறவிக்குள் யான் புகாவண்ணம் காத்தருள்க.

எண்ணப்பத்து - 4

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 75
மயிலின் மீதுவந் தருள்தரும் நின்திரு
வரவினுக் கெதிர் பார்க்கும்
செயலினேன் கருத் தெவ்வணம் முடியுமோ
தெரிகிலேன் என்செய்கேன்
அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே
ஆறுமா முகத் தேவே
கயிலை நேர்திருத் தணிகையம் பதிதனில்
கந்த னென்றிருப் போனே.

உரை:
கயிலை மலை போன்ற திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும்
கந்தசாமிக் கடவுளே, வேற்படை கொண்டு சூரனது மாமரத்தை வேரோடு வீழ்த்திய
ஐயனே, ஆறுமுகங்களை உடைய தேவனே, மயில் மேல் அமர்ந்து அன்பர்கட்கு வரம்
அருளும் உன் செல்வ வருகையை நாளும் எதிர்பார்த்து உள்ளேன்; என் எண்ணம்
எவ்வாறு முடியுமோ, அறியேன்; அது நிறைவேன யான் என்ன செய்வது, அறியேன்.

எண்ணப்பத்து - 3

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 74
களித்து நின்திருக் கழலினை யேழையேன்
காண்பனோ அலதன்பை
ஒளித்து வன்றுய ருழப்பனோ வின்னதென்
றுணர்ந்திலே னருட்போதம்
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே
தேவர்கள் பணி தேவே
தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்
சிவ தாருவே மயிலோனே.

உரை:
தளிரும் இலையும் பூவும் தழைத்து நிழல்பயந்து நிற்கும்
பொழில்கள் நிறைந்த தணிகைப் பதியில் வளர்ந்தோங்கும் சிவமாகிய கற்ப தருவே,
மயிலை ஊர்தியாக உடையவனே, திருவருள் ஞானத்தைத் தெளிவாக உணர்த்தி நிற்கும்
குரு உருவே, தேவர்கள் வணங்கும் தேவனே, நின் திருவடிகள் இரண்டையும்
ஏழையாகிய யான் மனம் மகிழ இன்புறக் காண்பேனோ? அல்லது உன்பால் அன்பின்றி
மிக்க துயரம் உறுவேனோ, இன்னது ஆகுமென உணர முடியாதாவனாக உள்ளேன்.

எண்ணப்பத்து - 2

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 73
சேல் பிடித்தவன் தந்தை யாதியர் தொழும்
தெய்வமே சிவப்பேறே
மால் பிடித்தவர் அறியொணாத் தணிகைமா
மலை யமாந்திடு வாழ்வே
வேல் பிடித்தருள் வள்ளலே யான் சதுர்
வேதமும் காணா நின்
கால் பிடிக்கவும் கருணைநீ செய்யவும்
கண்டுகண் களிப்பேனோ.

உரை:
ஐயம் திரிபுகளாகிய மயக்க வுணர்வுடையவர் அறிய முடியாத தணிகை
மலையில் எழுந்தருளும் பெருமானே, மீன் எழுதிய கொடியை உடைய காமனுக்குத்
தந்தையாகிய திருமால் முதலிய தேவர்கள் தொழுது பரவும் தெய்வமே, சிவபெருமான்
பெற்ற செல்வமே, வேற்படை ஏந்தும் வள்ளலே, வேதங்கள் நான்கும் கண்டறியாத
நின் திருவடியை யான் சேரவும், எனக்கு நீ அருள் புரியவும் நேரில் கண்டு
மகிழ்வேனோ, கூறுக.

20 July 2010

எண்ணப்பத்து - 1

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 72
அணிகொள் வேலுடை யண்ணலே நின்றிரு
வடிகளை யன்போடும்
பணிகிலே னகமுருகி நின் றாடிலேன்
பாடிலேன் மனமாயை
தணிகிலேன் திருத் தணிகையை நினைகிலேன்
சாமிநின் வழி போகத்
துணிகிலே னிருந்தென் செய்தேன் பாவியேன்
துன்பமும் எஞ்சேனே.

உரை:
அழகிய வேற்படையைக் கையில் ஏந்துகிற பெருமானே, உன்
திருவடிகளை அன்புடன் வணங்குகிறேனில்லை; மனம் உருக உன் திருமுன் நின்று
ஆடுகின்றேனில்லை; வாயாற் பாடுவதுமில்லை; மனமயக்கத்தை தரும் வெம்மையும்
தணிகிறேனில்லை; நீ எழுந்தருளும் திருத்தணிகையை நினைப்பதுமில்லை; உன்
நெறியில் ஒழுக நெஞ்சம் துணிகிறேனில்லை; இத்தகைய என் செய்கைகள் இன்பம்
தராவிட்டாலும் துன்பத்தையும் குறைக்கவில்லை.

பிரார்த்தனை மாலை - 30

சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள்
சொல்லு மெல்லாம்
வல்லாயென் றேத்த வறிந்தேன்
இனி யென்றன் வல்வினைகள்
எல்லாம் விடை கொண்டிரியும் என்மேல்
இயமன் சினமும்
செல்லாது காண் ஐயனே தணிகாசலச்
சீரரைசே.

உரை:
தணிகை மலையில் இருந்தருளும் சீர் பொருந்திய அருளரசே;
முருகப்பெருமானே; ஐயனே; சொற்களாகிய மலர் கொண்டு மாலை தொடுத்து சான்றோர்
சொல்வன யாவும் நீ வல்லவன் என ஏத்துவதை தெரிந்து கொண்டேன்; இனி என்னைச்
சூழ்ந்துள்ள வல்வினைகள் எல்லாம் என்னை விட்டு நீங்கி விடும்; என் மேல்
இயமன் கொண்டிருக்கும் கோபமும் வலுவிழந்து விடும்.

பிரார்த்தனை மாலை - 30

சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள்
சொல்லு மெல்லாம்
வல்லாயென் றேத்த வறிந்தேன்
இனி யென்றன் வல்வினைகள்
எல்லாம் விடை கொண்டிரியும் என்மேல்
இயமன் சினமும்
செல்லாது காண் ஐயனே தணிகாசலச்
சீரரைசே.

உரை:
தணிகை மலையில் இருந்தருளும் சீர் பொருந்திய அருளரசே;
முருகப்பெருமானே; ஐயனே; சொற்களாகிய மலர் கொண்டு மாலை தொடுத்து சான்றோர்
சொல்வன யாவும் நீ வல்லவன் என ஏத்துவதை தெரிந்து கொண்டேன்; இனி என்னைச்
சூழ்ந்துள்ள வல்வினைகள் எல்லாம் என்னை விட்டு நீங்கி விடும்; என் மேல்
இயமன் கொண்டிருக்கும் கோபமும் வலுவிழந்து விடும்.

பிரார்த்தனை மாலை - 29

பொன்னார் புயத்தனும் பூவுடை யோனும்
புகழ் மணியே
என்னாவி யின்றுணையே தணிகாசலத்
தேயமர்ந்த
மன்னா நின் பொன்னடி வாழ்த்தாது
வீணில் வருந்துறுவேன்
இன்னா வியற்று மியமன் வந்தாலவற்
கென் சொல்வனே.

உரை:
திருத்தணிகை மலையில் எழுந்தருளும் மன்னனே; முருகப் பெருமானே;
திருமகள் வீற்றிருக்கும் தோளையுடைய திருமாலும், தாமரைப்பூவை இடமாக உடைய
பிரமனும் போற்றும் புகழ் பொருந்திய மாணிக்க மணியே; எனக்குயிர்த்
துணையாகியவனே; உன் திருவடியை வாழ்த்தாமல் வீணே வருந்துகிறேனே, நோய்
செய்து உயிர் கவரும் எமன் வந்தால் அவனுக்கு யான் என்ன சொல்வேன் ?

பிரார்த்தனை மாலை - 28

பண்ணவனே நின் பதமல ரேத்தும்
பயனுடையோர்
கண்ணவனே தணிகா சலனே யயிற்
கையவனே
விண்ணவ ரேத்திய மேலவனே மயல்
மேவுமனம்
புண்ணவ னேனையும் சேர்ந்தா யென்னே
யுன்றன் பொன்னருளே.

உரை:
தணிகை மலையை உடையவனே; முருகப் பெருமானே; தேவர்கள்
போற்றுகின்ற மேலோனே; பெருவலிமை படைத்தவனே; உன் திருவடித் தாமரையை
வழிபடும் நல்வினைப் பயனை உடையவர்க்குக் கண்ணாய் விளங்குபவனே; மயக்கம்
பொருந்திய மனம் புண்ணுற்றிருக்கும் எளியேன் உள்ளத்திலும்
எழுந்தருளிகிறாயே ! உன் அருட் செயலை என்னவென்பேன் ?

19 July 2010

பிரார்த்தனை மாலை - 27

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 68
அடையாத வஞ்சகர்பாற் சென்றிரந்திங்
கலைந் தலைந்தே
கடையான நாய்க்குன் கருணை யுண்டோ
தணிகைக்கு ணின்றே
உடையாத நன்னெஞ்சர்க் குண்மையைக்
காண்பிக்கும் உத்தமனே
படையாத தேவர் சிறைமீட் டளித்தருள்
பண்ணவனே.

உரை:
தணிகைப் பதியில் எழுந்தருளுபவனே; துன்பத்தால் வருத்தமுறாத
நல்ல மனமுடையவர்க்கு மெய்ப்பொருளை உணர்த்துபவனே; உத்தமனே; படைக்கும்
கடவுளான பிரமன் முதலான தேவர்களை அசுரர்களிடமிருந்து சிறை மீட்டவனே;
கடவுளே; ஈகைப் பண்பு இல்லா வஞ்சகரிடம் அலைந்து திரிந்து இரந்த கடையனாகிய
இந்நாய்க்கு உன் கருணை உண்டோ?

பிரார்த்தனை மாலை - 26

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 67
தணியாத துன்பத் தடங்கடல் நீங்க நின்
றண்மலர்த் தாள்
பணியாத பாவிக் கருளு முண்டோ பசு
பாச மற்றோர்க்
கணியாக நின்ற வருட் செல்வமே தணி
காசலனே
அணி யாதவன் முதலா மட்ட மூர்த்தம்
அடைந்தவனே.

உரை:
தணிகை மலையுடைய பெருமானே, சூரியன், சந்திரன், உயிர்க்குயிர்,
நிலம், நீர், தீ, காற்று, வானம் என எட்டு உருவாகியவனே; பசுவாகிய உயிரைப்
பிணித்திருக்கும் மலம், மாயை, கன்மம் என்ற மும்மலங்களாகிய பாசத்தை
அற்றவர்க்கு அணியாக நின்று அருள் வழங்கும் செல்வமே; உன் குளிர்ந்த மலர்
போன்ற திருவடியைப் பணியாத எனக்கு துன்பக் கடலிலுருந்து நீங்க அருள்
உண்டோ?

பிரார்த்தனை மாலை - 25

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 66

மண்ணீ ரனல்வளி வானாகி நின்றருள்
வத்து வென்றே
தெண்ணீர் மையாற் புகழ் மாலயனே முதல்
தேவர்கடம்
கண்ணீர் துடைத்தருள் கற்பகமே யுனைக்
கண்டு கொண்டேன்
தண்ணீர் பொழிற்கண் மதிவந் துலாவும்
தணிகையிலே.

உரை:
குளிர்ந்த சோலைகளில் நிலவு வந்து தவழும் தணிகை மலையில்
நிலம், நீர், காற்று, விண் என ஐந்துமாகிய பரம்பொருளே, தேவர்களின் துயரைப்
போக்கியருளியவனே, கேட்டதை அளிக்கும் கற்பகமே, உன்னைக் கண்டு கொண்டேன்;
அதனால் இனி எனக்குக் குறையேதும் இல்லை.

18 July 2010

பிரார்த்தனை மாலை - 24

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 65
சாரும் தணிகையிற் சார்ந்தோய் நின்
தாமரைத் தாட்டுணையைச்
சேரும் தொழும்பர் திருப்பத மன்றியிச்
சிற்றடியேன்
ஊரும் தனமும் உறவும் புகழும்
உரை மடவார்
வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன்
மண் விண்ணிலே.

உரை:
உயர்ந்தோர் வந்து பரவும் தணிகை மலையில்
எழுந்தருளியிருப்பவனே, முருகப்பெருமானே, உன் பாதக்கமலங்களை நினைந்து
வழிபடும் தொண்டர்களின் திருவடிகளை விடுத்து யான் ஊர்களும், செல்வமும்,
உறவினரும், புகழும், இன்னுரை கூறும் மகளிரின் இன்பமும் பெற
விரும்புகிறேன். சிற்றியல்புகளையுடைய அடியனாகிய யான் விண்ணும் மண்ணுமாகிய
உலகங்களிற் பெறும் போகங்களை விரும்புகிறேன்.

பிரார்த்தனை மாலை - 23

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 64
என்செய்கை என்செய்கை எந்தாய்நின்
பொன்னடிக்கே யலங்கல்
வன்செய்கை நீங்க மகிழ்ந்தணியேன் துதி
வாயுரைக்க
மென்செய் கைகூப்ப விழிநீர் துளித்திட
மெய் சிலிர்க்கத்
தன்செய்கை என்பதற்றே தணிகாசலம்
சார்ந்திலனே.

உரை:
எந்தையாகிய முருகப்பெருமானே, உன் தணிகைமலையை அடைந்து
பணியவில்லை; என் வன்செயல்கள் கெடும் பொருட்டு என் செயல் என உணர்வற்று
உன்னை வணங்கவில்லை; வாய் உன் துதிகளைச் சொல்ல கைகள் தலையில் குவிய,
கண்கள் நீர் சுரக்க, மெய் சிலிர்க்க உன் திருவடிக்கு மாலை அணியவில்லை;
இத்தகைய என் செய்கைகளைப் பொறுத்தருளுக.

பிரார்த்தனை மாலை - 22

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 63
தலனே யடியர் தனிமனமாம் புகழ்
சார் தணிகா
சலனே யயனரி யாதியர் வாழ்ந்திடத்
தாங்கயில் வேல்
வலனே நின்பொன் னருள் வாரியின் மூழ்க
மனோலயம் வாய்ந்
திலனேல் சனனமரண மென்னும் கடற்
கென் செய்வேனே.

உரை:
புகழ் பொருந்திய தணிகை மலையை உடையவனே, பிரமன் திருமால்
முதலிய தேவர்கள் இனிதே வாழ கையில் கூரிய வேற்படையை ஏந்துபவனே,
அடியார்களின் மனமே கோயிலாகக் கொண்டவனே, உன் அழகிய திருவருட் கடலில்
மூழ்கித் திளைக்க மனஒருமை பொருந்தவில்லை; பிறப்பு இறப்பு எனும் கடலைக்
கடக்க முடியவில்லை; யான் என்ன செய்வேன், அருள் புரிக.

பிரார்த்தனை மாலை - 21

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 62
அடியேன் எனச் சொல்வ தல்லானின் றாளடைந்
தாரைக் கண்டே
துடியே னருணகிரி பாடும் நின்னருள்
தோய் புகழைப்
படியேன் பதைத் துருகேன் பணியேன்
மனப்பந்த மெலாம்
கடியேன் தணிகையைக் காணேன்என்
செய்வே னெங் காதலனே.

உரை:
அன்புடையவனே, முருகப்பெருமானே, உன் அடியவன் என சொல்லிக்
கொண்டாலும் உன் திருவடியை அடைந்த பெரியோரைக் கண்டால் அன்பால் என் மனம்
துடிப்பதில்லை; அருணகிரியார் பாடிய உன் அருள் வாய்ந்த திருப்புகழ் நூலை
யான் படிப்பதில்லை; அன்புற்று உள்ளம் பதைப்பதில்லை; உருகுவதில்லை. உடலால்
பணிவதில்லை; பந்தமாய் உள்ளவற்றை நீக்கினேனில்லை; உனது தணிகை மலையைத்
தரிசிப்பது மில்லை; யான் என்ன செய்வேன் ?

பிரார்த்தனை மாலை - 20

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 61
தெள்ளகத் தோங்கிய செஞ்சுடரே
சிவ தேசிகனே
கள்ளகத் தேமலர் காவார் தணிகையெங்
கண்மணியே
எள்ளகத் தேயுழன் றென்னின்றலைத் தெழுந்
திங்கு மங்கும்
துள்ளகத் தேன்சிரம் சேருங் கொலோநின்
துணையடியே.

உரை:
அகத்தே தேன் நிறைந்த மலர்ச் சோலைகள் பொருந்திய
திருத்தணிகையில் எழுந்தருளும் எங்கள் கண்மணியே, தெளிந்த மனமுடைய
உள்ளத்தில் ஓங்குகின்ற செஞ்சுடரே, சிவகுருவாயவனே, யாவராலும் இகழப்படும்
மனைவாழ்விற் கிடந்து வருந்தி, பல்வகை ஆசைகளால் ஆட்கொள்ளப்பட்டு
இங்குமங்கும் அலையும் என் தலைமேல் உன் இரு திருவடிகள் வந்து பொருந்துமோ,
அறியேன்.

17 July 2010

பிரார்த்தனை மாலை - 19

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 60
இருப்பாய மாய மனத்தால் வருந்தி
இளைத்து நின்றேன்
பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது
போதுமின்றே
கருப்பால் செயும் உன் கழலடிக்கே யிக்
கடையவனைத்
திருப்பா யெனிலென் செய்கேன் தணிகாசலத்
தெள்ளமுதே.

உரை:
திருத்தணிகை மலையில் எழுந்தருளும் தெளிவான அமுதுப்
போன்றவனே, முருகப்பெருமானெ, எளிதில் உருகாத இரும்பு போன்ற மாய மனதால்
வருத்தமுற்று இளைத்துள்ளேன்; மலை போன்ற வினைகள் சூழ்ந்த மண்ணக வாழ்வில்
புதைந்துள்ளேன்; இப்பிறவியாகிய காட்டை அழிக்கும் உன் திருவடி மீது என்
மனதை நீ திருப்பிச் செலுத்தாவிடில் யான் என்ன செய்ய முடியும்?

பிரார்த்தனை மாலை - 18

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 59
நவையே தருவஞ்ச நெஞ்சக மாயவும்
நானு னன்பர்
அவையே யணுகவும் ஆனந்த வாரியில்
ஆடிடவும்
சுவையே யமுதன்ன நின்றிரு நாமம்
துதிக்கவு மாம்
இவையே யெனெண்ணம் தணிகா சலத்துள்
இருப்பவனே.

உரை:
திருத்தணிகை முருகனே, நெஞ்சில் தோன்றும் வஞ்ச நினைவுகள்
கெடுவதும், அடியனாகிய யான் உன் அன்பர் கூட்டத்தை அடைவதும், அங்குப்
பெருகும் ஞானப் பெருக்கில் ஆனந்தமாக ஆடிடவும், சுவை மிக்க அமுதம் போன்ற
உன் திருப்பெயர்களை ஓதித் துதிப்பதும் ஆகிய இவைகளே என் எண்ணங்களாகும்.

பிரார்த்தனை மாலை - 17

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 58
கேளாது போலிருக்கின்றனை யேழையிக்
கீழ் நடையில்
வாளா விடர் கொண்டலறிடும் ஓலத்தை
மாமருந்தே
தோளா மணிச்சுடரே தணிகாசலத்
தூய்ப் பொருளே
நாளாயி னென் செய்குவே னிறப்பாய
நவை வருமே

உரை:
தணிகை மலையில் வீற்றிருக்கும் தூயப்பொருளே, முருகப்பெருமானே,
துளைக்கப்படாத உயரிய முத்தாகிய மணியின் ஒளியே, மாமருந்தே, ஏழையாகிய நான்
கீழ்ப்பட்டதான உலக நடையில் தோய்ந்து, துன்பம் பல கொண்டு அலறி
குக்கூரலிடுகிறேன். என் ஓலத்தைக் கேளாதவன் போல் இருக்கின்றாயே; இவ்வாறு
நாட்கள் கழிந்தால் இறத்தல் துன்பம் வந்து உன்னை மறக்கும் நிலைக்கு
ஆளாவேன்

பிரார்த்தனை மாலை - 16

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 57
செங்கையங் காந்த ளனையமின் னார்தம்
திறத் துழன்றே
வெங்கய முண்ட விளவாயினேன் விறல்
வேலினையோர்
அங்கையி லேந்திய ஐயா குறவர்
அரிதிற் பெற்ற
மங்கை மகிழும் தணிகேசனே யருள்
வந்தெனக்கே

உரை:
குறவர் தவமிருந்து பெற்ற மங்கையாகிய வள்ளியைக் கூடி மகிழும்
தணிகை மலைத் தலைவனே, வெற்றியையே அளிக்கும் வேற்படையை ஒரு கையில் ஏந்திக்
கொண்டிருக்கும் அழகனே, செங்காந்தள் மலர்களைப் போல் சிவந்த கைகள் உடைய
மகளிர் உறவு கொண்டு உள்ளத்தில் பக்தி இல்லாது கெட்டேனினும் எனக்கு அருள்
புரிந்து ஆண்டருள்க.

பிரார்த்தனை மாலை - 15

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 56
கையாத துன்பக் கடல்மூழ்கி நெஞ்சம்
கலங்கி யென்றன்
ஐயாநின் பொன்னடிக் கோல மிட்டே
னென்னை யாண்டு கொளாய்
மையார் தடங்கண் மலைமகள் கண்டு
மகிழ் செல்வமே
செய்யார் தணிகை மலை யரசே யயிற்
செங்கையனே.

உரை:
நன்செய், புன்செய் வயல்கள் சுழ்ந்த திருத்தணிகை மலைக்கு
அரசே, வேலேந்தும் சிவந்த கையை உடையவனே, மை தீட்டிய பெரிய கண்களையுடைய
உமையம்மை கண்டு இன்புறும் செல்வ மகனே, கரையேற விடாமல் ஆழ அழுத்தும்
துன்பக் கடலில் மனம் வருந்தி, உன் பொன்னடி நோக்கி ஓலமிடுகிறேன். என்னை
ஆட்கொண்டருள்வாயாக.

16 July 2010

பிரார்த்தனை மாலை - 14

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 55
வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ
மணிச்சுடரே
நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென
நண்ணி நின்றேன்
ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம்
இருங்கணிப்பூந்
தேனோ டருவி பயிலும் தணிகைச்
சிவ குருவே.

உரை:
வேங்கை மரங்களின் பூக்கள் சொரியும் தேன் கலந்து அருவிகள்
வீழும் தணிகை மலையில் எழுந்தருளும் சிவகுருவே, வானுலகக் குடிகளாகிய
தேவர்களை வாழ்வித்த மாணிக்க மணியின் ஒளியே, நான் ஓர் எளியன் ஆதலால் என்
துன்பம் போக்கி ஆண்டு கொள்க என வேண்டி நிற்கிறேன்; என்னைக் கண்டு உன்
மனம் இரங்காதிருப்பது ஏனோ, அறியேன்.

பிரார்த்தனை மாலை - 13

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 54
உனக்கே விழைவு கொண் டோலமிட்
டோங்கி யுலறுகின்றேன்
எனக்கே யருளித் தமியேன் பிழையுளத்
தெண்ணி யிடேல்
புனக்கேழ் மணிவல்லியைப் புணர்ந் தாண்டருள்
புண்ணியனே
மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர்
வானவனே.

உரை:
மனக்கவலையைப் போக்கும் தணிகை மலையில் அமர்ந்துள்ள தேவனே,
தினைப்புனத்தில் வளர்ந்த மரகதமணி போன்ற வள்ளியுடன் கூடி உலகுயிர்களைக்
காத்தருளும் புண்ணிய மூர்த்தியே, உன்மேல் விருப்பமுற்று ஓலமிட்டு நா
உலர்ந்து, மேனி வற்றி வாடும் எனக்கு அருள் தருவாயாக; உலகத்தொடர்பற்று
நிற்கும் என் பிழைகளை உன் திருவுள்ளத்தில் கொள்ள வேண்டா.

பிரார்த்தனை மாலை - 12

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 53
குருவே யயனரி யாதியர் போற்றக்
குறை தவிர்ப்பான்
வருவேல் பிடித்து மகிழ் வள்ளலே
குண மாமலையே
தருவே தணிகைத் தயாநிதியே துன்பச்
சாகரமாம்
கருவே ரறுத்திக் கடையனைக் காக்கக்
கடன் உனக்கே.

உரை:
குருவே; பிரமன், திருமால் முதலியோரால் போற்றப்படுபவனே; குறை
தீர்க்க வேலைப் பிடித்துள்ள வள்ளலே; சிற்குணங்களால் இயன்ற மலை போன்றவனே;
திருத்தணிகை மலையில் எழுந்தருளும் அருட் செல்வமே; துன்பக் கடலாகிய
பிறப்பின் வேரை அறுத்து கடையனாகிய என்னேக் காத்தருளுக.

15 July 2010

பிரார்த்தனை மாலை - 11

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 52
வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும்
விளங்கு மயில்
மேல்கொண்ட வீறும் மலர்முக மாறும்
விரைக்கமலக்
கால்கொண்ட வீரக்கழலும் கண்டாலன்றிக்
காம னெய்யும்
கோல்கொண்ட வன்மை யறுமோ தணிகைக்
குருபரனே.

உரை:
திருத்தணிகை மலைமேல் எழுந்தருளும் குருபரனே, வேலேந்திய
கையும், வெற்றியுற்ற தோள்களும், விளங்குகின்ற மயில் மேல் வரும் தனிச்
சிறப்பும், தாமரைபோன்ற முகங்கள் ஆறும், திருவடியில் அணிந்த
வீரக்கண்டையும் கண்ணாரக் கண்டாலன்றிக் காமவேள் செலுத்தும் மலரம்புகளின்
வன்மை கெடாது.

13 July 2010

பிரார்த்தனை மாலை - 10

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 51
போற்றெ னெனினும் பொறுத்திடல் வேண்டும்
புவிநடையாம்
சேற்றே விழுந்து தியங்கு கின்றேனைச்
சிறிதுமினி
ஆற்றே னெனதர சேயமுத யென்
அருட் செல்வமே
மேற்றேன் பெருகு பொழில் தணிகாசல
வேலவனே.

உரை:
மேன்மேலும் தேன் பெருகும் பொழில்களை உடைய தணிகை மலையுடைய
வேலவனே, என் அரசே, அமுதே, என் அருட் செல்வமே, இம்மண்ணுலக வாழ்வான
சேற்றில் வீழ்ந்து கரையேற முடியாமல் அறிவு மயங்கி இதுவரை உன்னைப் போற்றி
வழிபடாமலிருந்தேன். இனிச் சிறிதும் ஆற்றேன்; என் குற்றத்தைப் பொறுத்தருள
வேண்டுகிறேன்.

பிரார்த்தனை மாலை - 9

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 50

சிற்பகல் மேவுமித் தேகத்தை யோம்பித்
திருவனையார்
தற்பகமே விழைந் தாழ்ந்தேன் தணிகை
தனிலமர்ந்த
கற்பகமே நின்கழல் கருதேனிக் கடைப்
படுமென்
பொற்பக மேவிய நின்னருள் என்னென்று
போற்றுவதே.

உரை:
திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் கற்பகமே, நிலையில்லாத
இத்தேகத்தை விரும்பி, மங்கையர் போகத்தில் மூழ்கித் தாழ்ந்தேன். உன்
கழலணிந்த திருவடியை நினைக்காமல் சிறுமையுற்றேன். ஆயினும், என் கடைப்பட்ட
உள்ளத்தை வெறுத்து ஒதுக்காமல் அருள் கூர்ந்து எழுந்தருளிய உன் அருளினைப்
போற்றுகிறேன்.

பிரார்த்தனை மாலை - 8

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 49
கொள்ளுண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு
வாழ்க்கையிற் குட்டுண்டு மேல்
துள்ளுண்ட நோயினிற் சூடுண்டு மங்கையர்
தோய் வெனு மோர்
கள்ளுண்ட நாய்க்குன் கருணையுண் டோநற்
கடலமுதத்
தெள்ளுண்ட தேவர் புகழ் தணிகாசலச்
சிற்பரனே.

உரை:
தூய கடல் அமுதத்தை உண்ட தேவர்கள் புகழும் தணிகாசல அரசே,
ஞானத்தால் மேலாயவனே, பிறர் பொருளை அபகரிக்கும் வஞ்சகர்களுடன் கூடி
நடத்திய வாழ்க்கையில் தாக்குண்டு, நோய்களால் வருந்தி, பெண்கள்
சேர்க்கையெனும் கள்ளை உண்டு அலையும் இந்நாய்க்கு உன் கருணையுண்டோ.

பிரார்த்தனை மாலை - 7

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 48
அமராவதி யிறைக் காருயி ரீந்த
அருட் குன்றமே
சமரா புரிக்கரசே தணிகாசலத்
தற்பரனே
குமரா பரமகுருவே குகா வெனக்
கூவி நிற்பேன்
எமராசன் வந்திடுங்கால் ஐயனே எனை
ஏன்று கொள்ளே.

உரை:
அமரர் உலகமாகன அமராவதியின் அரசன் இந்திரனுக்கு வாழ்வளித்த அருட்
குன்றே, தொண்டை நாடான போருர்க்கு அரசனே, தணிகை மலையில் எழுந்தருளும்
மேன்மையுற்றவனே, குமரா, பரமகுருவே, குகா என உன் திருப்பெயர்களை சொல்லி
அழைக்கிறேன். எமன் என் உயிரை கவரும் போது அடியேனே ஆதரிக்க வேண்டுகிறேன்.

12 July 2010

பிரார்த்தனை மாலை - 6

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 47
நல்காத வீணர்தம் பாற்சென் றிரந்து
நவைப்படுதல்
மல்காத வண்ண மருள்செய் கண்டாய்
மயில் வாகனனே
பல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும்
பரஞ் சுடரே
அல்காத வண்மைத் தணிகா சலத்தில்
அமர்ந்தவனே.

உரை:
சுருங்காத வளமை பொருந்திய திருத்தணிகை மலையில் வீற்றிருப்பவனே,
புலன்கள் மீது செல்லும் பலவகை ஆசைகளை அறுத்த நல்லோர்க்கு அருளும்
பரஞ்சுடரே, மயிலை ஊர்தியாக உடைய முருகப் பெருமானே, ஈயாத கீழ் மக்களிடம்
சென்று ஒன்று வேண்டி இரந்து வருத்தப்படும் குறை எனக்கு உண்டாகாதவாறு
அருள் புரிவாயாக.

11 July 2010

பிரார்த்தனை மாலை - 5

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 46
மணியே தினைப்புன வல்லியை வேண்டி
வளர் மறைவான்
கனியே யெனநின்ற கண்ணே யென்
னுள்ளக் களி நறவே
பணியே னெனினும் எனைவலிந்தாண் டுன்
பதந்தரவே
நணியே தணிகைக்கு வாவென வோர்மொழி
நல்குவையே.

உரை:
வள்ளியை அடைய வேண்டி தினைப்புனத்தில் வளரும் வேப்பமரமாக நின்ற
மணியே, என் நெஞ்சில் ஊரும் தேனே, யான் உன்னைப் பணியேன்; ஆயினும் எனை வலிய
ஆட்கொண்டு உன் பதம் தர தணிகைமலைக்கு வா என அழைத்து அருள் நல்குவாய்.

பிரார்த்தனை மாலை - 4

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 45

அன்னே எனைத்தந்த அப்பா என்றேங்கி
அலறுகின்றேன்
என்னே யிவ்வேழைக் கிரங்காது நீட்டித்
திருத்தல் எந்தாய்
பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப்
பொருப்பமர்ந்த
மன்னே கலப மயில் மேல் அழகிய மாமணியே.

உரை:
அம்மையே, எனை தருவித்த தந்தையே, பொன்னே, மங்கல குணங்கள்
பொருந்திய குன்றுப் போல விளங்குபவனே, தணிகை மலையில் வீற்றிருக்கும்
மன்னனே, நீண்ட தோகைகள் உடைய மயிலில் ஏறும் அழகிய மாமணியே, உனை வேண்டி
ஏங்கி அரற்றுகிறேன். இந்த ஏழைக்காக நீ இரங்காமல் காலம் நீட்டிக்கும்
காரணம் அறியேன்.

பிரார்த்தனை மாலை - 3

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 44

மாணித்த ஞான மருந்தே யென் கண்ணினுள்
மாமணியே
ஆணிப் பொன்னே யென தாருயிரே தணி
காசலனே
தாணிற் கிலேனினைத் தாழாத வஞ்சர்
தமதிடம் போய்ப்
பேணித் திரிந்தன னந்தோ வென் செய்வனிப்
பேதையனே.

உரை :
ஞானமாகிய மருந்தே, என் கண்ணினுள் விளங்கும் மாமணியே,
மாற்றுயர்ந்த பொன்னே, எனது ஆருயிரே, தணிகாசலனே, உன் திருவடிகளைத் தொழாத
வஞ்சகர் பால் சென்றேன். அந்தோ, என் செய்வேன்.

10 July 2010

பிரார்த்தனை மாலை - 2

பிரார்த்தனை மாலை
திருவருட்பா - முதல் திருமறை - பாடல் எண் - 43


கண் மூன்றுறு செங்கரும்பின் முத்தே
பதம் கண்டிடுவான்
மண் மூன்றுலகும் வழுத்தும் பவள
மணிக் குன்றமே
திண் மூன்று நான்கு புயங்கொண் டொளிர்
வச்சிர மணியே
வண்மூன்றலர் மலைவாழ் ஏறிய
மாணிக்கமே.


உரை :

             மூன்று கண்களை உடைய சிவப்பெருமானின் முத்தே, பன்னிரெண்டு தோள்களுடைய வைரமே, மயிலேறும் மாணிக்கமே, மூவுலகு மக்களும் உன் பாதங்களை வணங்குகிறார்கள். நானும் அவ்வாறே வணங்குகிறேன்.

பிரார்த்தனை மாலை - 1

பிரார்த்தனை மாலை

திருவருட்பா - முதல் திருமறை - பாடல் எண் - 42

சீர்கொண்ட தெய்வ வதனங்க லாறும் திகழ் கடப்பந்
தார்கொண்ட பன்னிருதோள்களும் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
கார்கொண்ட வண்மைத் தணிகாச்சலமு மென் கண்ணுற்றுதே.


உரை :
சிறப்பான தெய்வஓளி திகழும் ஆறு முகங்களும், கடம்ப மாலை
தவழும் பன்னிரெண்டு தோள்களும், கூர்மையான வேலும், அழகிய மயிலும்,
கருமேகம் சூழ்ந்த தணிகாச்சல மலையும் என் கண் முன்னே தோன்றுகிறது.

06 July 2010

கந்தர் சரணப்பத்து - 10

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 41
வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமான் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவை யில்லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
வேதத்தின் பொருளாயவனே, தேவர்கட்குப் பெருமானே, ஞான வடிவினனே,
அழகிய மயிலை வாகனமாக உடையவனே, ஓசையின் ஒலி வடிவாகியவனே, குற்றமே
இல்லாதவனே, கந்தசாமிக் கடவுளே உன் திருவடி எனக்குப் புகலிடமாகும்.
--
Sent from my mobile device

கந்தர் சரணப்பத்து - 9

மன்னே யெனையாள் வரதா சரணம்
மதியே யடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம்
புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
அன்னே வடிவே லரசே சரணம்
அறுமா முகனே சரணம் சரணம்
கன்னேர் புயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
மன்னவனே, எனை ஆண்டருளும் வரதனே, மதியே, தூயனே, புகழ்ந்து
பாடும் அன்பர் மனதில் புகுந்திருப்பவனே, அன்னை போல்பவனே, கூரிய
வேலேந்தும் வேந்தனே, ஆறுமுகப் பெருமானே, மலைப் போன்ற தோளை உடையவனே,
கந்தசாமிக் கடவுளே, சரணம் சரணம்.
--
Sent from my mobile device

கந்தர் சரணப்பத்து - 8

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 39

ஒளியுள் ளொளியே சரணம் சரணம்
ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம்
சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம் சரணம்
அமுதே அறிவே சரணம் சரணம்
களியொன் றருள்வோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
ஒளிக்கு ஒளி நல்கும் காரணப் பொருளே, ஒன்றாகவும் பலவாகவும்
தோன்றும் பரம்பொருளே, தெளிவுடையார்க்கும் தெளிவு அளிக்கும் தெளிபொருளே,
சிவமே, சிவப் பேற்றுக்கு உரிய தவமே, நன்கு பழுத்த கனியே, அமிர்தமே,
அறிவே, இன்பமே பொருந்த அருள்பவனே, கந்தசாமிக் கடவுளே உன் திருவடியே
எனக்குப் புகலாகும்.

கந்தர் சரணப்பத்து - 7

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 38
நங்கட் கினியாய் சரணம் சரணம்
நந்தா வுயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையான் மகனே சரணம்
சிவை தந்தருளும் புதல்வா சரணம்
துங்கச் சுகநன் றருள்வோய் சரணம்
சுரர் வாழ்த்திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
எங்களுக்கு இனியவனே, குன்றாத உயர்வுடைய சம்பந்தப் பெருமானே,
பிறைத் திங்களைச் சூடிய சடையையுடைய சிவபெருமான் மகனே, பார்வதி தந்தருளிய
நற் புதல்வனே, உயரிய இன்ப வாழ்வை மிக நல்குபவனே, தேவர்கள் வாழ்த்தி
மகிழும் எங்கள் தலைவனே, கங்கை மடியிலேந்தி வளர்த்த குழந்தையே, கந்தசாமிக்
கடவுளே, உன் திருவடியே சரணம்.

கந்தர் சரணப்பத்து - 6

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 37

கோலக் குறமான் கணவா சரணம்
குலமா மணியே சரணம் சரணம்
சீலத்தவருக் கருள்வோய் சரணம்
சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
நடுவாகிய நல்லொளியே சரணம்
காலற் றெறுவோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
அழகிய குறமகளாகிய வள்ளி நாயகியார் கணவனே, உயர் குலத்துப் பெரிய
மாணிக்க மணியே, சீலமுடைய பெரியோர்க்கு அருள் செய்பவனே, சிவபெருமான் மகனே,
நிலத்தில் வாழும் மக்களின் துன்பத்தைப் போக்குபவனே, நீதி வடிவாகிய நல்ல
ஒளிப் பொருளே, நமன் போந்து செய்யும் துன்பத்தை நீக்குபவனே, கந்தசாமிக்
கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாகும்.

05 July 2010

கந்தர் சரணப்பத்து - 5

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 36

நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுண் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
ஆடுகின்ற ஒப்பற்ற மயிலை வாகனமாக உடையவனே, நல்லவர்கள் பாராட்டு
வல்லமை உடையவனே, தேகத்திற்கு வண்மையும் வாழ்க்கைக்குச் செல்வமும்
தருபவனே, தேவர்கள் எய்துதற்கு அரியவனே, பெரிய வண்மையுடைய தோளை உடையவனே,
ஒப்பற்ற பெரிய முதல்வனே, தெய்வ மணியே, கந்தசாமிக் கடவுளே சரணம் சரணம்
சரணம்.
--
Sent from my mobile device

கந்தர் சரணப்பத்து - 4

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 35

பூவே மணமே சரணம் சரணம்
பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம்
சிவ சண்முகனே சரணம் சரணம்
காவேர் தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
மலராகவும் மணமாகவும் உள்ளவனே, பொருட் செல்வமும்
அருட்செல்வமுமானவனே, தலைவனே, குகப் பெருமானே, ஞானாசிரியனே, ஞானச்
செல்வமே, தேவனே, தெளிவின் வடிவானவனே, சிவ சண்முகக் கடவுளே, கற்பகச்
சோலைக்கு அழகு தரும் கற்பதருவே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே
எனக்குப் புகலிடமாகும்.
--
Sent from my mobile device

03 July 2010

கந்தர் சரணப்பத்து - 3

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 34

முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவே லரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
முடியா முதற் பொருளே, முருகனே, குமரனே, வடிவேல் ஏந்தும் அரசனே,
மயிலேறும் மணிபோன்ற பெருமானே, அடியார்க்கு எளியவனே, அரியவனே, பெரியவனே,
விலக்கரிய கதியாகுபவனே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப்
புகலிடமாகும்.

கந்தர் சரணப்பத்து - 2

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 33

பண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணே ரொளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணே ருயிரே உணர்வே சரணம்
உருவே யருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
இசை பொருந்திய மறையை ஓதுவதால் விளையும் பயனே, பதிப் பொருளே,
பரம்பொருளே, விண்ணிடத்து விளங்கும் ஒளிப் பொருளே, அதனின் மேலாய வெளியே,
அவ்வெளியின் விளைவாகிய பொருளே, உடலினுள் நிலவும் உயிராயவனே, உணர்வு
வடிவாயவனே, உருவமாயும் அருவமாயும் உள்ள பொருளே, எனக்கு உறவாகியவனே, என்
கண்ணே, கண்ணின் மணியே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குக்
கதியாகும்.

கந்தர் சரணப்பத்து - 1

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 32

அருளா ரமுதே சரணம் சரணம்
அழகா வமலா சரணம் சரணம்
பொருளா வெனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில் வாகனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
அருள் நிறைந்த அமுதமே, அழகனே, மலமில்லாத தூயனே, என்னையும்
பொருளாக மதித்து ஆள்கின்ற புனிதனே, பொன்னும் மணியும் போல்பவனே, மருட்சி
உடையார் நினைத்ததற் கரியவனே, மயிலை வாகனமாக உடையவனே, கருணைக்குச் சிறந்த
இடமானவனே, கந்தனே, உன் திருவடியே எனக்கு புகலிடமாகும்.

02 July 2010

தெய்வ மணிமாலை - 31

நான்கொண்ட விரதநின் னடியலாற் பிறர்தமை
நாடாமை யாகுமிந்த
நல்விரத மாங்கனியை இன்மையெனு மொருதுட்ட
நாய்வந்து கவ்வி யந்தோ
தான்கொண்டு போவதினி யென்செய்வே னென்செய்வேன்
தளராமை யென்னும் ஒருகைத்
தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
தன்முகம் பார்த் தருளுவாய்
வான்கொண்ட தெள்ளமுத வாரியே மிகுகருணை
மழையே மழைக் கொண்டலே
வள்ளலே யென்னிருகண் மணியே யெனின்பமே
மயிலேறு மாணிக்கமே
தான்கொண்ட சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
கந்தவேள் கடவுளே, தெய்வ மணியே, தெள்ளிய அமுதக்கடல்
உருவாயவனே; கருணையாகிய மழையே; அம்மழையைப் பொழியும் மேகமே, வள்ளலே, என்
கண்ணின் மணி போல்பவனே, யான் பெறும் இன்ப வடிவே, மயில் மேல் அமர்ந்து
வரும் மாணிக்க மணியே, நான் கொண்ட கொள்கை நின் திருவடியன்றிப் பிறரை
நாடிச் செல்லாமையாகும்; இந்த கொள்கையாகிய கனியை வறுமையெனும் ஒரு
துட்டதனம் படைத்த நாய் தன் வாயாற் கவ்வி ஓடுகிறதே, நான் என்ன செய்வேன்?
தளர்ச்சியிலாமை என்ற கைத்தடி கொண்டு அடித்துத் துரத்த வலிமையில்லைதவனாக
உளேன்; அதனால் என் முகம் பார்த்து அருள் நல்க வேண்டுகிறேன்.

தெய்வ மணிமாலை முற்றிற்று.

தெய்வ மணிமாலை - 30

எத்திக்கு மென்னுளம் தித்திக்கும் இன்பமே
என்னுயிர்க் குயிராகு மோர்
ஏகமே ஆனந்த போகமே யோகமே
என்பெருஞ் செல்வமே நன்
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
மூர்த்தியே முடிவிலாத
முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
முத்தாடும் அருமை மகனே
பத்திக்கு வந்தருள் பரிந்தருளும் நின்னடிப்
பற்றருளி யென்னை யிந்தப்
படியிலே யுழல்கின்ற குடியிலே ஒருவனாப்
பண்ணாம லாண்டருளுவாய்
சத்திக்கு நீர்ச் சென்னைக் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
முழங்குகின்ற கடற்கரையில் உள்ள சென்னை நகர் கந்தகோட்ட
கந்தசாமிக் கடவுளே, தெய்வ மணியே, எப்பக்கம் நோக்கினும் உள்ளத்தில் தோன்றி
இனிக்கும் இன்ப வடிவே, என் உயிர்க்குயிராய் விளங்கும் தனிப் பொருளே,
ஆனந்த போகம் தருபவனே, எனக்கு கிடைத்த பெருஞ் செல்வமே, முக்திப்
பேற்றுக்கு முழுமுதலான பெருமானே, மெய்யுணர்வின் உருவே, முடிவிலாத முருகப்
பெருமானே, நெடியோனாகிய திருமால் மருமகனே, சிவபெருமான் முத்தமிட்டு
இன்புறும் அரிய மகனே, உன் திருவடியை எனக்குப் பற்றாக உதவி இவ்வுலகில்
திரியும் குடிகளில் ஒருவனாக்காமல் ஆட் கொண்டருளுவாயாக.

தெய்வ மணிமாலை - 29

உளமெனது வசநின்ற தில்லையென் தொல்லைவினை
ஒல்லைவிட் டிடவு மில்லை
உன்பதத் தன்பில்லை யென்றனக் குற்றதுணை
யுனையன்றி வேறுமில்லை
இளையனவ னுக்கருள வேண்டுமென் றுன்பால்
இசைக்கின்ற பேருமில்லை
ஏழையவனுக் கருள்வ தேனென்று னெதிர்நின்று
இயம்புகின் றோரு மில்லை
வளமருவு முனது திருவருள் குறைவ தில்லைமேல்
மற்றொரு வழக்கு மில்லை
வந்திரப் போர்களுக் கிலையென்ப தில்லைநீ
வன்மனத் தவனு மல்லை
தளர்விலாச் சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
கந்த வேளே, தெய்வ மணியே, என் உள்ளம் என்வசமாய் நிற்பதில்லை;
என் முன்வினையும் விரைவில் விட்டு நீங்கவில்லை; உன் திருவடியில் அன்பு
செய்வதுமில்லை; எனக்கு உற்ற துணை உனையன்றி யாருமில்லை; இவனுக்கு அருள்
செய்யவேண்டும் என உன்னிடம் எனக்காக எடுத்துரைப்பவருமில்லை; அவனுக்கு
அருள் புரிவது எதற்கு என உன் திருமுன் நின்று எனை எதிர்த்து
மொழிபவருமில்லை; உன் அருட்செல்வம் குறைந்து போவதுமில்லை; உன்னிடம்
இரப்பவர்க்கு இல்லையென நீ சொல்வதும் கிடையாது; நிலைமை இவ்வாறிருக்க உன்
அருள் பெறாது நான் வருந்துவதற்கு காரணம் அறியேன்.